பொது

''GENG BALA'' எனும் கொள்ளை & வழிப்பறி கும்பலைப் போலீஸ் கைது செய்தது

02/09/2024 05:52 PM

ஜோகூர் பாரு, 02 செப்டம்பர் (பெர்னாமா) --  கடந்த ஆகஸ்ட் 12 தொடங்கி ஆகஸ்ட் 26-ஆம் தேதிவரை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இரு பெண்கள் உட்பட11 பேர் கொண்ட ''GENG BALA'' எனும் கொள்ளை மற்றும் வழிப்பறி கும்பலைப் போலீஸ் கைது செய்தது.

ஜோகூர் பாரு, கூலாய், பொந்தியான் மற்றும் முவார் ஆகிய பகுதிகளைச் சுற்றி கடந்த ஐந்து முதல் ஆறு மாதங்களாக அக்குழு செயல்பட்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் சிபி எம்.குமார் தெரிவித்தார்.

கைதானவர்கள் 20 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று சிபி எம்.குமார் தெரிவித்தார்.

''பாதுகாப்பு இல்லாத வீடுகள் மற்றும் சொகுசு வீடுகளைக் குறிவைக்கிறது. இந்த குழுவின் செயல் முறை என்னவென்றால், அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது குடியிருப்பாளர் இருந்தால், அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பார்கள்'', என்று கூறினார்.

நகைகள், பல்வேறு வணிக முத்திரையிலான கைப்பைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்ற சுமார் 95 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை மீட்டதோடு கொள்ளை மற்றும் வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சில உபகரணங்களைப் போலீசார் பறிமுதல் செய்ததாக குமார் கூறினார்.

அக்குழுவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதன் வழி இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து ஜோகூரைச் சுற்றி நடந்த 31 கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களுக்குத் தங்கள் தரப்பு தீர்வுக் கண்டுள்ளதாக குமார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)