அரசியல்

சபா தேர்தல்: நம்பிக்கை கூட்டணியுடன் இணைய அம்னோ முடிவு

12/09/2024 08:04 PM

ஷங்காய், சீனா, 12 செப்டம்பர் (பெர்னாமா) --  சபா மாநில தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து செயல்பட அம்னோ முடிவு செய்துள்ளது.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான சிறந்த வழியாக இந்நடவடிக்கை கருதப்படும் வேளையில், மத்திய மற்றும் சபா மாநில அம்னோ இணைந்து இம்முடிவை எடுத்திருப்பதாக, அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

மத்திய அளவில் அமல்படுத்தப்பட்டு வரும் ஒத்துழைப்பு நடைமுறைகளை, சபா தேசிய முன்னணி பின்பற்றுவதற்கும், மத்திய மற்றும் சபா மாநில அம்னோ ஒப்புக் கொண்டதாக தேசிய முன்னணியின் தலைவருமான அவர் கூறினார்.

"இது ஒரு ஜனநாயக நாடு. உள்ளூர் கட்சியோ அல்லது தீபகற்ப கட்சியோ இல்லை. எனவே, யார் மனதையும் புண்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடக்கூடாது. மீண்டும் முதலமைச்சராக விரும்பும் கட்சியாக இருந்தாலும்," என்றார் அவர்.

இன்று சீனாவிற்கான தனது பயணத்தை நிறைவு செய்து, ஷங்காயில் மலேசிய ஊடகவியளார்களுடன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அஹ்மாட் சாஹிட் அத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

சபா மாநில தேர்தலை எதிர்கொள்ள மாநில அளவில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் சபா தேசிய முண்ணணியும் அம்னோவும் கலந்து ஆலோசிக்கவிருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சபா வாரிசான் கட்சி உடனான ஒத்துழைப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, அக்கட்சி ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஒரு பகுதி என்பதால், அதனுடன் எந்தப் பிரச்சனையும் எழக்கூடாது என்றும் சாஹிட் பதிலளித்தார்.

முன்னதாக, எதிர்வரும் சபா மாநில தேர்தலில் பல்வேறு இனங்களை உட்படுத்திய உள்ளூர் கட்சியை ஆதரிக்கும் படி, சபா மக்களை வாரிசான் தலைவர்  டத்தோ ஶ்ரீ முஹமட் ஷாபிக் அப்டால் வலியுறுத்தியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)