பொது

பண மோசடி; பணத்தைத் திருப்பிச் செலுத்தும் முகவர்களின் மோசடி தந்திரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

06/09/2024 07:49 PM

கோலாலம்பூர், 06 செப்டம்பர் (பெர்னாமா) --  பண மோசடி குற்றத்தில் பாதிக்கப்படுபவர்களின் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான சேவையை வழங்கும் முகவர்களின் மோசடி தந்திரங்களை அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் அடையாளம் கண்டுள்ளது.

பிறரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பணத்தை அதன் முகவர்கள் திரும்பப் பெற முடியும் என்று கூறப்படுவதாக புக்கிட் அமான், வணிக குற்றப் புலனாய்வுத் துறை, JSJK இயக்குநர் டத்தோ ஶ்ரீ ரம்லி முஹமட் யூசோஃப் தெரிவித்தார்.

''முன்பு கூறியது போல, சட்ட விதிமுறைகளுக்கு இணங்க பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை விசாரணை அதிகாரியால் மட்டுமே செய்ய முடியும். முகவர்களின் மூலமாகவோ, அரசு சாரா இயக்கத்தின் மூலமோ இதுபோன்ற விவகாரங்களில் குறுக்கு வழிகள் இல்லை,'' என்றார் அவர்.

சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் மோசடியாக மாற்றப்பட்ட பணத்தைத் தடுக்க புலனாய்வு அதிகாரிகளுக்கு பிடிஆர்எம் சில நடைமுறைகளை உருவாக்கியுள்ளதாக ரம்லி கூறினார்.

இதனிடையே, பண மோசடி குறித்து போலீஸ் புகார் வழங்குபவர்கள், சட்ட விதிமுறைகளுக்கேற்ப மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் தங்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)