விளையாட்டு

அமெரிக்க பொது டென்னிஸ்: பட்டத்தை வென்றார் சபாலென்கா

08/09/2024 06:08 PM

நியூயார்க், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  அமெரிக்க பொது டென்னிஸ் பட்டத்தை முதன் முறையாக கைப்பற்றியுள்ளார் பெலாருசின் அரினா சபாலென்கா.

சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான இறுதி ஆட்டத்தில் அவர் உபசரணை நாட்டின் ஜெசிகா பெகுலாவை நேரடி செட்களில் தோற்கடித்தார்.

இந்த இறுதியாட்டத்தில், ஜெசிகா பெகுலாவுடன் கடுமையான போட்டியைச் சந்தித்த சபாலென்கா, அதனை முறியடித்து 7-5, 7-5 என்ற நிலையில் வெற்றி அடைந்தார்.

இதன் வழி, இவ்வாண்டிற்கான தனது இரண்டாவது Grand Slam பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.

உலகின் இரண்டாம் நிலை விளையாட்டாளரான சபாலென்கா, இரண்டாம் முறையாக அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி வெற்றியாளராக உருவெடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில், இப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்த அவர், வெற்றியை இலக்காகக் கொண்டு பயணித்து முதலிடத்தை அடைந்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில்
ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்களான மேக்ஸ் பர்செல் - ஜோர்டன் தாம்சன் இணையினர், ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ் - டிம் புயெட்ஸ் ஜோடியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றனர்.

கடந்தாண்டில், நடந்த இறுதி சுற்றில் தோல்வியைத் தழுவிய பர்செல்-தாம்சன் ஜோடி, இம்முறை, 6-4, 7-6 என்ற நேரடி செட்களில் வெற்றிக்கண்டு முதல் Grand Slam பட்டத்தை வென்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)