சிறப்புச் செய்தி

ஈராண்டு நிறைவில் அன்வாரின் பிரதமர் பயணம்

24/11/2024 08:18 PM

கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா) -- அரசியல் வைரிகளை ஒன்றிணைத்து, பெரும் நெருக்கடிக்களுக்கு மத்தியில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை கட்டியெழுப்பி, நாட்டின் பத்தாவது பிரதமராய் பொறுப்பேற்ற டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆட்சிக்காலதின் வயது இன்று இரண்டாகிறது.

43 ஆண்டுகளாக தீவிர அரசியலில் நடைபோட்டு வரும் அவரின் பழுத்த அனுபவமும் சாணக்கிய ஆற்றலும் அன்வாரை இந்த ஈராண்டு காலத்தில் பல துணிச்சலான முடிவுகளை எடுக்க வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை.

பல விமர்சனங்களுக்கு மத்தியிலும், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி, அந்நிய நாடுகளுடனான புதுப்பிக்கப்பட்ட அரசதந்திர உறவுகள், முதலீடுகள், இலக்கிடபட்ட மானியங்கள் என அவரால் நாடு அடைந்த முன்னேற்றத்தை இந்த ஈராண்டு நிறைவில் அரசியல் ஆய்வோடு அலசுகிறது பெர்னாமா செய்திகள்.

மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை இடம்பெற்றிராத பல திருப்பங்களை 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மெய்ப்பித்திருந்தாலும், அதனால் இன்று வரையிலும் பெரியளவிலான எதிர்மறை தாக்கங்கள் இல்லை என்று அரசியல் ஆய்வாளர் இரா.முத்தரசன் கூறுகின்றார்.

''இந்த இரு ஆண்டுகளில் நாட்டில் மிகப் பெரிய அளவில் இனப் பிரச்சனையோ, அரசியல் பதற்ற சூழலோ, ஊழல் பிரச்சனைகளோ விஸ்வரூபம் எடுக்காமல் அவர் ஆட்சி நடத்தி வருவதே ஒரு சாதனைதான்,'' என்றார் அவர்.

பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும் அமைச்சரவை, அரசாங்கம் மட்டுமின்றி நாட்டு மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து தொடர்ந்து பூர்த்தி செய்து வரும் அவரின் தலைமைத்துவத்திற்கு மக்கள் நிறைவான ஆதரவளித்து வருகின்றனர்.

எனினும், மலேசிய இந்திய சமுதாயத்திற்கான பிரதமரின் சேவை, பாராட்டை பெறுமளவிற்கு முத்தாய்ப்பு அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்ற பொதுவான கருத்துக்கும் முத்தரசன் இவ்வாறு பதிலளித்தார்.

''இந்திய சமூகத்தை மட்டுமல்ல; எந்தவொரு சமூகத்தையும் இன ரீதியாக தாம் புறக்கணிக்கவில்லை என்று பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். பிரதமராக தமது செயல்பாடுகள் அனைத்து மலேசியர்களையும் சென்றடையும் நோக்கங்களைக் கொண்டவை என்பதை அவர் எப்போதும் உறுதியாக தெரிவித்து வருகிறார்,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, நாட்டில் நிகழும் ஊழல்களை கையாள்வதில் பிரதமர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் பல நடுநிலையாளர்களின் பாராட்டை பெற்று வருவதாக முத்தரசன் கூறினார்.

இதனிடையே, இந்தியா, இலங்கை, இங்கிலாந்து என உலக நாடுகளுடன் பிரதமர் கொண்டுள்ள நட்பும் நாட்டின் மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்களிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

''பிரதமரின் செயல்பாடுகள் மூலம் நம் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மீதும் பொருளாதார வளர்ச்சி மீதும் நம்பிக்கை கொண்டு அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. குறிப்பாக இலக்கவியல் தொழில்நுட்பத் துறையில் கூகள் போன்ற நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. அனைத்துலக அரசதந்திர உறவுகளிலும் பிரதமர் தமது முத்திரையைப் பதித்துள்ளார். அவர் கலந்துகொள்ளும் பன்னாட்டு மாநாடுகளில் ஆற்றும் உரை பலராலும் கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பிலும் மலேசியா தோழமை நாடாக அங்கீகரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

அதோடு, இஸ்ரேல் - காசா போர் குறித்து விவகாரங்களிலும் சற்றும் தயக்கம் காட்டாமல் தமது தீர்க்கமான அறிக்கைகளையும் நிலைப்பாட்டையும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வப்போது வெளியிட்டு வருவதும் அவரின் துணிச்சலை வெளிப்படுத்துவதாக முத்தரசன் புகழாரம் சூட்டினார்.

இதனால், உலகின் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் 15-வது இடத்தில் அன்வாரின் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக அளவில் கவனம் ஈர்த்த பிரதமராக இருக்கும் அன்வாரின் செல்வாக்கும் சொல்வாக்கும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு, நாட்டின் அனைத்து இன மக்களின் முன்னேற்றத்திலும் அவர் துணை புரிய வேண்டும் என்பதை 'சிறை முதல் பிரதமர் வரை'' எனும் நூலின் ஆசிரியரான முத்தரசன் பெர்னாமா தொடர்புகொண்டபோது கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]