பொது

கடந்த 4 மாதங்களில் இந்தியர்களுக்காக கூடுதல் 13 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு - ரமணன்

08/09/2024 08:05 PM

கோலாலம்பூர், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  SPUMI GOES BIG, பெண் மற்றும் BRIEF-I போன்ற நிதி உதவி திட்டங்களின் மூலம் இந்திய தொழில்முனைவோர் அடைந்து வரும் கணிசமான வளர்ச்சியைத் தொடர்ந்து, இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த மடானி அரசாங்கம் அதன் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவிருப்பதாக கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தெக்கூன் Nasional-இன் கீழ் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி தொடங்கப்பட்ட SPUMI GOES BIG திட்டத்திற்குத் தொடக்கமாக மூன்று கோடி ரிங்கிட் ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில் இத்திட்டம் நல்ல வரவேற்பு கிடைத்தாக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

ஆதலால், பின்னர் கூடுதலாக மூன்று கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டோடு சேர்ந்த்து மொத்தம் ஆறு கோடி ரிங்கிட் இந்திய தொழில்முனைவோருக்கும் அதன் மூலம் வழங்கப்பட்டதாக ரமணன் விவரித்தார்.

இந்த முயற்சியின் வழி, 202 தொழில்முனைவோருக்குக் கடந்த வாரம்வரை ஒரு கோடி ரிங்கிட் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் ஐந்தாம் தேதி தொடங்கப்பட்ட BRIEF-i எனப்படும் BANK RAKYAT இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் மூலமாக 322 தொழில்முனைவோருக்குக் கடந்த வாரம்வரை 2 கோடியே 70 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டதாகவும் ரமணன் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

அதேவேளையில், AMANAH IKHTIAR MALAYSIA நிறுவனத்தின் மூலம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கப்பட்ட பெண் எனும் திட்டத்தின் கீழ் 1,250 இந்திய பெண் தொழில்முனைவோருக்கு கடந்தவாரம் வரை ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண் திட்டத்திற்கு மொத்தம் ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் உள்ள ஒருமைப்பாட்டு அரசாங்கம் நாட்டின் இந்திய சமுதாயத்திற்காக கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 13 கோடி ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளதை ரமணன் மீண்டும் நினைவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)