பொது

தொண்டு இல்லங்களில் 402 சிறார்களும் பதின்ம வயதினரும் மீட்பு; 171 பேர் கைது

11/09/2024 06:27 PM

கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் ஒன்று வழிநடத்திய 20 தொண்டு இல்லங்களில், இன்று அதிகாலை போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ஒரு வயது குழந்தையிலிருந்து 17 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர் 402 பேர் காப்பாற்றப்பட்டனர்.

அதிகாலை மணி ஆறுக்கு தொடங்கி, சிலாங்கூரில் உள்ள 18 இல்லங்களிலும் நெகிரி செம்பிலானில் உள்ள இரு இல்லங்களிலும் மேற்கொள்ளப்பட்ட OP GLOBAL சோதனை நடவடிக்கையில் 17-இல் இருந்து 64 வயதிற்குட்பட்ட 171 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

காப்பாற்றப்பட்ட 402 பேரில் 201 ஆண்களும் 201 பெண்களும் அடங்குவர் என்று இன்று பகாங் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரசாருடின் கூறினார்.

சுகாதாரப் பரிசோதனை மற்றும் ஆவணப்படுத்தும் செயல்முறைக்காக அவர்கள் அனைவரும் தற்போது கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் இரண்டாம் தேதி அளிக்கப்பட்ட நான்கு போலீஸ் புகார்களை அடுத்து ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம், 2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம், 2007-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்பு கடத்தல் சட்டம் உட்பட இது தொடர்பிலான சட்டங்களின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)