பொது

முண்டாசுக் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் 103-வது நினைவு நாள்

11/09/2024 06:36 PM

கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) --  முண்டாசுக் கவிஞர் சுப்ரமணிய பாரதியின் 103-வது நினைவு நாள் இன்று.

சுதந்திரம், பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த மகாகவியின் எழுத்துக்கள், கொடுத்த தாக்கத்தைத் தமிழ் மக்கள் இன்றும் நினைக்காத நாள் இல்லை.

அன்று சமூகத்தின் அனைத்து பக்கங்களிலும் தீயாக இயங்கி இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளரான பாரதியின் சுதந்திர உணர்வுகளை அவரின் நினைவு நாளில், நினைவு கூர்கின்றது பெர்னாமா செய்திகள்.

1882-ஆம் ஆண்டு எட்டயப்புரத்தில் பிறந்த அந்த மகாகவி தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.

இவருடைய கவிப்புலமையைப் பாராட்டி எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கியது முதல் “சுப்பிரமணிய பாரதியார்” என்று அழைக்கப்பட்டார்.

அரசியல், ஆன்மீகம், காதல், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, பெண் விடுதலை என்று அந்த முண்டாசு கவியின் பேனா, தொடாத எல்லைகள் இல்லை.

அதில், விடுதலைப் போராட்ட காலத்தில் இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் பாரதத்தின் தீயாக அவர் போற்றப்பட்டார்.

"இந்தியா" பத்திரிகை மூலம் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளையும் பாரதி அப்போதே எழுதினார்.

அவரின் எழுச்சிக்கு தமிழ் நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட ஆங்கிலேய ஆட்சி "இந்தியா" பத்திரிக்கைக்குத் தடை விதித்து பாரதியைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர்”

என்று கனல் தெறிக்கும் தமது விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து சுதந்திர உணர்வுகளைத் தமது படைப்புகள் வழி அவர் முழங்கினார்.

அவர் விட்டுச் சென்ற சுதந்திர உணர்வுகளும் தேச பக்தியும் என்றும் நிலைத்திருக்க வேண்டி, தமிழ்ப் பள்ளிகளிலும் இளையோர்கள் மத்தியிலும் அவரின் எழுத்துகளுக்கு இன்னமும் படைப்புகள் மூலம் ஊயிர் ஊட்டப்பட்டு வருகிறது.

மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் ஏற்புடையதாக மாற்றுவதில் பாரதியின் வார்த்தைக் கூர்மையும் செயல் ஆர்வமும் அஸ்திவாரங்கள் இட்டதை காலம் என்றும் மறக்காது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)