பொது

எஸ்.என். முத்துவின் 'ஆத்ம ராகங்கள் இன்னிசை இரவு'

12/09/2024 07:45 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) --  ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உதித்த பாடல்களைத் தொகுத்து அதை மலேசிய இரசிகர்களுக்கு படைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் நாட்டின் புகழ்ப்பெற்ற கலைஞர்களில் ஒருவரான எஸ்.என்.முத்து.

ஆண்டுதோறும் இளையராஜாவின் பிறந்தநாளின் போது மலேசிய மக்களின் சமர்ப்பணமாக இருக்க வேண்டுமென்று தொடங்கிய தமது கலைப்பயணமும் இந்த இசைநிகழ்ச்சியும் இன்று பத்தாண்டுகளைக் கடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் நாட்டின் பிரபல பத்து பாடகர்கள் மற்றும் சிறந்த 15 இசைக் கலைஞர்களைக் கொண்டு ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக 'ஆத்ம ராகங்கள் இன்னிசை இரவு' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதன் முறையாக சுமார் ஆயிரம் பேர் அமரக் கூடிய சிலாங்கூர், ஷா ஆலாம், MBSA மண்டபத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் எஞ்சியிருக்கும் நிலையில், ஏறக்குறைய 300 டிக்கெட்கள் மட்டுமே இதுவரை விற்கப்பட்டுள்ளதாக முத்து வருத்ததுடன் தெரிவித்தார்.

"பல சவால்களைக் கடந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். உள்நாட்டு இசைக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கமும் அதில் அடங்கும். ஆனால் நான் நினைத்த அளவிற்கு எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து வரும் பெரிய கலைஞர்கள் தொடங்கி புதிய முகங்கள் வரை டக்கெட் விற்பனை செய்தால் அடுத்த மூன்று அல்லது நான்கு மணிநேரங்களில் அனைத்து முழுமையாக விற்றுத் தீர்கிறது. ஆனால் இங்கே நாங்கள் மாதக் கணக்கில் கூவிக் கூவி விற்றாலும் பாதி அளவிலான டிக்கெட்கள் கூட இன்னும் விற்றுத் தீர்க்கப்படவில்லை," என்று அவர் குறைபட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் மூலமாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஐந்து தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க தாம் செலவிடவிருப்பதாகவும் முத்து தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தாம் இச்சேவையைப் புரிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"கடந்த காலங்களில் புறநகர் பள்ளிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தேன். இம்முறை பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நகர்ப்புற பள்ளிகளையும் இத்திட்டத்தில் இணைத்துள்ளேன். ஒரு மாணவருக்கு 80 முதல் 100 ரிங்கிட் வரையில் மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு செலவிடப்படும் வகையில் இதிவரை ஆயிரக் கணக்கிலான மாணவர்களுக்கு இச்சேவையை என்னால் வழங்க முடிந்துள்ளது,"என்று முத்து விவரித்தார்.

கலைஞர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எஸ்.என்.முத்துவின் முயற்சிக்கு தமது தரப்பு முழு ஆதரவு வழங்கும் என்று நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளராகிய பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைவர் சிவநேசன் அந்தோணி தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் ஒளியேறிய சூப்பர் சிங்கர் பாடல் போட்டியின் வெற்றியாளர் ஜோன் ஜெராம், இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகராக கலந்து கொள்கிறார்.

"முதல் முறையாக மலேசியா வந்திருக்கிறேன். மிகவும் எதிர்பார்ப்பாக உள்ளது. நிச்சயம் மலேசியர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் என் பாடல் பட்டியல் இடம்பெற்றிருக்கும். அனைவரும் வந்து நிகழ்ச்சியை உளமாற கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார் அவர்.

வரும் 14ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணி 7.30-க்கு ஷா ஆலாம் விஸ்மா MBSA மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் மேல்விவரங்களுக்கு 016 3497196 அல்லது 014 6257357 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)