பொது

போதைப் பொருளை கடத்தியதாக அரசியல்வாதியின் உதவியாளர் மீது குற்றப்பதிவு

12/09/2024 07:51 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை 305 கிராம் கானாபிஸ் வகை போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் ஓர் அரசியல்வாதியின் உதவியாளர் ஒருவர் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேன் எஸ்.அருண்ஜோதி முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரிந்ததாக குற்றச்சாட்டப்பட்ட 31 வயதுடைய முஹ்மட் யூசோப் ராஃவுதர் தலையசைத்தார்.

எனினும், இவ்வழக்கு உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் உள்ளதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

இன்று காலை மணி 9-க்கு போலீஸ் அதிகாரிகளின் பாதுக்காப்புடன், கைவிலங்கு அணிந்த நிலையில் முஹ்மட் யூசோப் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

செப்டம்பர் 6ஆம் தேதி காலை மணி 10.15-க்கு கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் பள்ளி வாசலுக்கு முன்புறம் உள்ள கார் நிறுத்தும் வளாகத்தில் 305 கிராம் கானாபிஸ் வகை போதைப் பொருளை விநியோகித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 39B உட்பிரிவு 1 உட்பிரிவு a, அதேசட்டம் செக்ஷன் 39B உட்பிரிவு 2 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையும் 12 முறைக்கு குறையாத பிரம்படியும் விதிக்கப்படலாம்.

வேதியியல் அறிக்கைக்காக இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)