பொது

9 வயது சிறுமியை பதிவு செய்து காணொளி பதிவிட்ட பேருந்து ஓட்டுநர் குற்றஞ்சாட்டப்பட்டார்

12/09/2024 07:56 PM

பத்து பாஹாட், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி பேருந்து ஓட்டுநர் ஒருவர், ஆரம்பப் பள்ளி மாணவியை பதிவு செய்து பதிவேற்றம் செய்த காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், சட்டம் 588, செக்‌ஷன் 233 உட்பிரிவு ஒன்று உட்பிரிவு a-இன் கீழ், இன்று, பத்து பாஹாட் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவ்வாடவர் குற்றம் சாட்டப்பட்டார்.

எனினும், நீதிபதி ஒஸ்மான் அஃபென்டி முஹ்மட் சாலே முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை 24 வயதுடைய அந்நபர் மறுத்தார்.

அவ்வாடவர் தெரிந்தே முறையற்ற ஒரு கருத்தை தமது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒன்பது வயது சிறுமியின் காணொளியைப் பதிவு செய்து, ''இன்று எனது அன்புக்குரியவர் வீட்டுப்பாடம் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்'' என்று பதிவிட்டு காதல் சின்னத்தையும் பதிவேற்றம் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி பத்து பாஹாட், பாரிட் ராஜா, தாமான் புடிமானில் அச்சிறுமியைக் கண்காணித்ததாகவும் குற்றம் பதிவாகியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது அதிகபட்சம் ஓராண்டு சிறை அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும் அதேச் சட்டம் செஷன்ஸ் 233(3)-இன் கீழ் தண்டனை அளிக்கப்படும்.

பத்தாயிரம் ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்த நீதிபதி ஒஸ்மான் அஃபென்டி, அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரையோ சாட்சியாளர்களையோ அவர் தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)