பொது

பி.கே.எஸ்-இல் ஏ.ஐ; உள்கட்டமைப்பை தயார்படுத்துவதில் இலக்கவியல் அமைச்சு நம்பிக்கை 

12/09/2024 07:56 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) --  அக்டோபர் 18ஆம் தேதி 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் நிலையில், 

பி.கே.எஸ் எனப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் செயற்கை நுண்ணறிவு AI செயலி பயன்பாட்டை ஆதரிக்கும் வகையில் உள்கட்டமைப்பை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த இலக்கவியல் அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.

அத்துறையின் மேம்பாட்டிற்கு, MDEC எனப்படும் மலேசிய பொருளாதார இலக்கவியல் அமைப்பு இப்பரிந்துரையை முன் வைத்திருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

"தொழில்நுட்பம் மற்றும் பலவற்றை பயன்படுத்தி மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நாம் எவ்வாறு ஊக்கமளிக்க முடியும். இவை நாம் கவனிக்கக்கூடிய விவகாரங்களாகும். மற்றும் பல்வேறு அமைச்சுகள் ஆய்வு செய்யக்கூடிய முக்கிய அம்சம் இதுவாகும். அனைத்து துறைகளிலும் இருக்கக்கூடிய குறிப்பிட்ட பிரச்சனைகளை தொழில்நுட்பம் குறிப்பாக AI மூலம் தீர்வுக் காண முடியும். எனவே, இது அனைத்து அமைச்சுகளில் பிரச்சனைகளையும் குறைக்கும். ஆனால், உள்கட்டமைப்பு அடிப்படையில் கவனம் செலுத்தலாம்," என்றார் அவர்.

இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற MDEC-இன் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான உச்சநிலை மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்  அவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சுகள் மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பாக சுகாதாரம், விவசாயம் மற்றும் பொருளாதார துறைகளுக்கு AI தொழில்நுட்பம் மூலம் தீர்வு வழங்க முடியும் என்று அவர் கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)