இஸ்லாமிய பொருளாதார அம்சங்களை ஹலால் தொழில்துறை முழுமையாக நிறைவேற்ற முடியும்

17/09/2024 05:39 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- குறிப்பிட்ட சில தரப்பினரை மட்டுமே உள்ளடக்கியதாக காணப்படும் நிதித் துறையை விட, ஹலால் தொழில்துறை இஸ்லாமிய பொருளாதாரத்தின் அம்சங்களை இன்னும் முழுமையாக நிறைவேற்ற முடியும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, பிஎம்கேஎஸ் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் உட்பட பரவலான பங்கேற்பை அத்தொழில்துறை ஈர்க்க முடியும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மடானி பொருளாதாரத்தின் இலக்கிற்கு ஏற்ப இருக்கும் ஹலால் தொழிற்துறையும், ஒட்டுமொத்த மக்களின் கண்ணியம் தேவைப்படும் மகாசிட் ஷரியா கொள்கையும் பின்பற்றுவதாக தெளிவுப்படுத்தினார்.

''எப்போதும் வர்த்தகம், வணிகம், உயர்தர வர்க்கமாக கருதப்படும் குழுவிற்கு இடமளித்து வழிகாட்ட முடியும். இந்த ஹலால் தொழில்துறை ஒவ்வொரு விவசாயி, மீனவர், சிறு வணிக உரிமையாளர்கள், எஸ்.எம்.இ மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளையும் ஈடுபடுத்தும். ஏனெனில் இது விரிவான பங்களிப்பை உறுதிசெய்யும்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் 2024 மலேசிய அனைத்துலக ஹலால் கண்காட்சி, மிஹாஸ்-ஐ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றும்போது அன்வார் அவ்வாறு கூறினார்.

உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவரும் ஹலால் தொழில்துறை, நிதி கழகங்கள் மீது கவனம் செலுத்துவது மற்றும் riba செயல்முறையின் நிராகரிப்பு ஆகியவற்றை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)