பாங்கி, பிப்ரவரி 03 (பெர்னாமா) -- தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள தேசிய ஹலால் கொள்கை மேம்பாடு வரும் மே மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை ஜாகிம் மற்றும் மாநில இஸ்லாமிய சமய மன்றங்களின் கீழ் உள்ள சான்றிதழ் அதிகாரங்களைப் பாதிக்காமல் உள்ளடக்கிய மற்றும் நிலையான ஹலால் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் இக்கொள்கை வியூக வழிகாட்டியாகச் செயல்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
''மலேசியா ஒரு விரிவான ஹலால் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வழிநடத்தியுள்ளது. சான்றிதழ் உற்பத்தி செயல்முறை, ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில் மேம்பாடு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அணுகுமுறை மதிப்புகள், ஒருமைப்பாடு மற்றும் ஷரியா இணக்கம் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் மலேசியாவை உறுதியான நடவடிக்கைகள் மற்றும் அமைப்புகள் மூலம் ஹலாலில் உலக வழிகாட்டியாக மாற்றுகிறது'', என்றார் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப்.
இன்று சிலாங்கூர், பாங்கியில் நடைபெற்ற 2026 உலக இஸ்லாமிய பொருளாதார மேம்பாடு மற்றும் அனைத்துலக ஹலால் பொருளாதார மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய டத்தோ ஶ்ரீ ஃபடில்லா அவ்வாறு கூறினார்.
ஹலால் தொழில்துறை வளர்ச்சியை வலுப்படுத்துவதற்காகச் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான சான்றிதழ் வழங்கும் செயல்முறை, சான்றிதழ் அமைப்புகள் மற்றும் பரஸ்பர அங்கீகாரம் ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழஙப்படும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)