விளையாட்டு

பாரா சுக்மா: அம்பெய்தலில் கவனம் ஈர்த்தார் குமார் கிருஷ்ணன்

27/09/2024 08:37 PM

கூச்சிங், 27 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024 பாரா சுக்மா விளையாட்டு போட்டியில், அம்பெய்தல் போட்டியில், COMPOUND பிரிவில் பேராக் மாநிலம் அதிக தங்கங்களை வேட்டையாடி வருகின்றது. 

அதன் வெற்றியாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள குமார் கிருஷ்ணன், தாம் களமிறங்கிய போட்டிகளில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று கவனம் ஈர்த்துள்ளார். 

நேற்று நடைபெற்ற அம்பெய்தல் போட்டியில், பேராக் மாநிலத்தை சேர்ந்த தனித்து வாழும் தாயான நூருல் ஃபார்ரா அப்துல் ஹமிட் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற வேளையில், அவருடன் குழு பிரிவில் இணைந்து போட்டியிட்ட குமார் கிருஷ்ணனும் தங்கம் வென்றார். 

1998-ஆம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும் வழியில், விபத்தில் சிக்கி கால்களின் செயல்பாட்டை இழக்க நேரிட்ட குமார்,  சில ஆண்டுகாலம் சிகிச்சையிலும் ஓய்விலும் இருந்து, பின்னர் பொறியியல் துறையில் பட்டப் படிப்பை முடித்திருக்கின்றார். 

மாற்றத்திறனாளிகளுக்கு வாழ்வே சவாலாகும் பட்சத்தில், விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக, 2014-ஆம் ஆண்டில் அம்பெய்தல் போட்டியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள தொடங்கிய குமார் அதில் வெற்றியும் கண்டுள்ளார். 

இருந்தும், உடலினை உறுதிசெய் என்பதற்கு ஏற்ப, குமார்  மேற்கொண்ட முயற்சிகளும் பயிற்சிகளும் கடந்த சுக்மாவில் மட்டுமின்றி இம்முறையும் அவரை தங்க மகனாக உருவாக்கி உள்ளது.

தொடக்கத்தில் கெடா மாநில பிரதிநியாக இருந்த குமார், பின்னர் தமது பயிற்றுநர் புவன் என்பவரின் வழிகாட்டுதலில், பேராக் மாநித்திலற்கு மாற்றலாகி அங்கு போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். 

இதுவே அவர் பங்கேற்கும் கடைசி பாரா சுக்மா போட்டியாகும். 

இதனிடையே, பேராக்கில் மற்றுமொரு வீராங்னை, டி. அன்னா மரியா என்பவரும் நேற்றைய அம்பெய்தல் போட்டியின், குழு பிரிவில் தங்கம் வென்றார். 

பிறவிலேயே மாற்றுத்திறனாளியான அன்னா மரியா பல்வேறு மனப்போராட்டங்களை கடந்து இம்முறை சுக்மாவில் சாதனை புரிந்துள்ளார். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)