விளையாட்டு

சவூதி ப்ரோ லீக்; பினால்டி வாய்ப்பில் அல்-நசர் வெற்றி

28/09/2024 07:57 PM

சவூதி அரேபியா, 28 செப்டம்பர் (பெர்னாமா) -- சவூதி புரோ லீக் காற்பந்து போட்டியில்,அல் வேஹடாவுக்கு எதிரான ஆட்டத்தில், அல்-நசர் கிளப் 2-0 என்ற நிலையில் வெற்றிப் பெற்றுள்ளது. 

சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொனால்டோ, பினால்டி வாய்ப்பின் மூலம் அல்-நசர் கிளப்பை வெற்றிப் பெறச் செய்துள்ளார்.

சொந்த அரங்கில் விளையாடிய அல்-நசர் முதல் பாதியின் 40 நிமிடங்கள் வரை கோல் போடுவதில் தடுமாற்றம் கண்டது. 

ஆயினும், விடாது முயற்சித்த அது முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் ஒரு கோல் அடித்து 1-0 முன்னிலை வகித்தது. 

பின்னர், இரண்டாம் பாதியில், அல் வேஹடா ஆட்டக்காரர் செய்த தவற்றால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு அவ்வணி 10 பேருடன் விளையாட நேர்ந்தது. 

அதற்காக, வழங்கப்பட்ட பினால்டி வாய்ப்பை கேப்டன் ரொனால்டோ மிக லாவகமாக கோலாக்கி அவ்வணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இந்த வெற்றியின் வழி, அல்-நசர் 11 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

 

-- பெர்னாமா