பொது

ஐசிடி துறையில் இருவழி உறவை உட்படுத்தி மலேசியா - தென் கொரியாவுக்கு இடையில் ஒப்பந்தம்

01/10/2024 05:12 PM

சியோல், 01 அக்டோபர் (பெர்னாமா) -- 2019ஆம் ஆண்டில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், ஐசிடி துறையில் இருவழி உறவை உட்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவும் தென் கொரியாவும் கையெழுத்திட்டன.

தற்போது அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வரும் நவம்பர் மாதத்திற்குள் மேம்படுத்த இவ்விரு நாடுகளும் எண்ணம் கொண்டுள்ளன.

இன்று, தென் கொரியா, சியோலில், 2024ஆம் ஆண்டு GSMA M360 APAC மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற கலந்துரையாடலில் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃஃபட்சிலும், தென் கொரியாவின் அறிவியல் மற்றும் ஐசிடி அமைச்சர் யூ சாங்-இம் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டது.

இலக்கவியல் வளர்சிக்கு ஏற்ப, தற்போது பல்வேறு துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு, ஏஐ தொழில்நுட்பமும் மேம்படுத்த பரிந்துரைக்கப்படும் அம்சங்களில் அடங்கும் என்று ஃபஹ்மி குறிப்பிட்டார்.

தென் கொரியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் 5ஜி சேவை மட்டுமின்றி AI தொழில்நுட்பத்தில் இயங்கும் 5ஜி மற்றும் ஏஐ செயலிக்கு தேவையான வேகமான இணையப் பயன்பாடு போன்றவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

தென் கொரியாவிலுள்ள கொரிய அறிவியல் மற்றும் ஐசிடி அமைச்சுடன் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் வழி 2019ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அவ்விரு நாடுகளுக்கும் நீண்டகால பலனை அளிப்பதோடு முதலீட்டை அதிகரித்து, இரு நாடுகளுக்கு இடையில் உயர் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)