சிறப்புச் செய்தி

வயதான நாடாக மலேசியா; காரணங்களும் சவால்களும்

01/10/2024 05:50 PM

கோலாலம்பூர், 01 அக்டோபர் (பெர்னாமா) -- 2030-ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 15.3 விழுக்காடாக உயரவிருக்கும் நிலையில் வயதான நாடு எனும் பட்டியலில் மலேசியாவும் இணையவிருக்கிறது.

ஆயுள் நீடிப்பு மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதம் ஆகியவற்றால் இது சாத்தியம் என்று அண்மையில் மலேசிய புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகள் கூறும் வேளையில், அதன் காரணங்களும் அதனால் ஏற்படும் சவால்களும் பல. 

1970-ஆம் ஆண்டுகளில் நேரடி பிறப்பு, அதாவது உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் 32.4 விழுக்காடாக பதிவானது.

அந்நிலை பெருமளவு சரிவு கண்டு, 2022-ஆம் ஆண்டு 12.9 விழுக்காடாக மட்டுமே பதிவாகியுள்ளது.

TFR எனப்படும் மொத்த கருவுருதல் விகிதம் கணிசமான சரிவைக் கண்டு வருவது இதற்கான முதன்மை காரணங்களில் ஒன்று என்று மலேசிய புள்ளியியல் துறையின் தேசிய கணக்கு பிரிவு துணை இயக்குநர் மாலதி பொன்னுசாமி விளக்கினார்.

''1970-ஆம் ஆண்டுகளில் ஒரு பெண்ணுக்கு 20-இல் இருந்து 22 வயதிற்குள் திருமணமாகிவிடும். ஆனால் தற்போது 28-இல் இருந்து 30 வயதிற்குப் பின்னரே பெண்ணின் திருமண வாழ்க்கை ஆரம்பமாகிறது. இதனாலேயே, கருவுருதலில் சிக்கல் ஏற்பட்டு இனப்பெருக்கம் குறைகிறது,'' என்றார் அவர்.

இக்கருவுருதல் பிரச்சனைக்கு வித்திடும் மேலும் சில காரணங்களையும் அவர் முன்வைத்தார்.

''உயர்க்கல்வி பெற்ற பெண்களின் அதிகரிப்பு, தாமதமான திருமணம், தொழில்துறை சார்ந்த பெண்களின் பங்கேற்பு, திருமண வயது அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு கருவிகளின் அதிகரிப்பு,'' ஆகியவையும் காரணங்கள் என்றார் அவர்.

பிறப்பு விகிதம் குறையும்போது, தானாகவே அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கையால் சுகாதார பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு வசதிகள் மற்றும் ஓய்வூதிய வருமான பாதுகாப்பு போன்ற பல சவால்களை நாடு சந்திக்க வேண்டியுள்ளதாகவும் மாலதி கூறினார்.

''தேசிய புள்ளியியல் துறை வெளியிட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது. பொருளாதார அமைச்சு தயார் செய்து வரும் தேசிய முதிர்வு நெறிமுறையில் இந்த நடவடிக்கைகள் யாவும் அடங்கவுள்ளது,'' என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மலேசியா வயதான நாடு எனும் நிலையை அடையவிருக்கும் வேளையில், முதியோர்களிடையே ஏழ்மை நிலை நிலவாமல் இருக்கும் பொருட்டு கூடுதல் ஓய்வூதியத் திட்டங்களை ஊழியர் சேமநிதி வாரியம், KWSP வகுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

2050-ஆம் ஆண்டில் உலகளவில் உள்ள முதியோரின் எண்ணிக்கை சுமார் 1,600 கோடியாக அதிகரிக்கும் என்று இன்று அனுசரிக்கப்படும் உலக முதியோர் தினத்தில் ஐ.நா வெளியிட்ட தகவல் ஒன்று கூறுகின்றது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]