உலகம்

சில நாடுகளில் நிலவும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி அவசியம் - ஐ.நா

06/10/2024 01:35 PM

காசா, 06 அக்டோபர் (பெர்னாமா) -- சில நாடுகளில் நிலவி வரும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சபை, ஐ.நா.வின் பொது செயலாளர் அந்தோணியோ குட்டேரெஸ் மீண்டும் வலியுறித்தியுள்ளார்.

வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்துலக சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7--ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டதால் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வரும் காசாவில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

''அக்டோபர் 7-ஆம் தேதி முதல், அதிர்ச்சியூட்டும் வன்முறை மற்றும் இரத்தக்களரி அலை தொடங்கியது. ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற பயங்கரமான தாக்குதல்களைத் தொடர்ந்து காசாவிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கும், இப்போது லெபனான் மக்களுக்கும் வாழ்க்கையைச் சிதைத்து, ஆழ்ந்த துன்பங்களை வழங்கி வருகிறது. இதைப் பற்றி நான் அடிக்கடி தெளிவாகப் பேசியிருக்கிறேன். பணயக்கைதிகளை விடுவிக்கும் நேரம் இது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தும் நேரம். இப்பகுதியைச் சூழ்ந்துள்ள துன்பத்தை நிறுத்த வேண்டிய நேரம் இது,'' என்றார் அவர். 

இவ்விரு தரப்புக்கும் நடைபெற்றும் வரும் போர், நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவடையவிருக்கும் நிலையில் அந்தோணியோ குட்டேரெஸ் அவ்வாறு கூறியிருக்கிறார்.

சுமார் 100 இஸ்ரேல் பிரஜைகளை ஹமாஸ் தரப்பு பணயக்கைதிகளாக சிறை பிடித்துள்ளது.

அவர்களில் 70 பேர் மட்டுமே உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு தொடங்கி இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களினால் காசாவில் 41,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்நிலையில், காசா மீது தாக்குதல்களை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் தற்போது ஈரான் மற்றும் லெபனான் மீது அதனை விரிவு செய்துள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]