உலகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவு

07/10/2024 06:27 PM

காசா, 07 அக்டோபர் (பெர்னாமா) -- இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டு இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இந்தத் தாக்குதல் உலகளவில் எதிர்ப்பைத் தூண்டி, ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்த வேளையில், மத்திய கிழக்கில் பரந்த மோதலையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நாளை நினைவு கூறும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்திய நேரமான அந்நாட்டு நேரப்படி காலை 06.29 மணிக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.

கடந்தாண்டில் இத்தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக காசாவிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

இந்த நிறைவு நாளை முன்னிட்டு, பாலஸ்தீனம் தாக்குதல்கள் நடத்தலாம் என்ற அச்சத்தில் திங்கட்கிழமை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கை நிலையில் இருந்தனர்.

இதனிடையே, காசா போரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அர்ஜெண்டினா மற்றும் சிலியின் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூறும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.

மேலும், போரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சந்தியாகோவில், குடியேறி இருக்கும் பாலஸ்தீன மக்களிடம் முன்னாள் பாலஸ்தீனப் பிரதமர் முஹமட் ஷ்டய்யே உரையாற்றியதோடு, தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் அனைத்துலக நடவடிக்கைகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

காசா மீதான இஸ்ரேலின் அடுத்தடுத்த இராணுவத் தாக்குதலில் சுமார் 42,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இந்த முதலாம் நிறைவு ஆண்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை துருக்கியின் தென்கிழக்கு நகரமான தியர்பகீரில் நூற்றுக்கணக்கான மக்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களையும் ஹமாஸுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.

இஸ்ரேல் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவையும் குறிவைத்துள்ள நிலையில், அதன் வான் தாக்குதல்களில் பெய்ரூட்டின் பல இடங்கள் அழிக்கபட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)