உலகம்

ஜம்மு - காஷ்மீரில் தேமாக-உம் ஹரியானாவில் பாஜக-உம் வெற்றி

09/10/2024 05:07 PM

ஶ்ரீநகர், 09 அக்டோபர் (பெர்னாமா) -- ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் ஹரியானாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, பா.ஜ.க வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவிருக்கிறது.

அதேவேளையில், ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, தேமாக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற வேளையில் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்களிப்பு நடைபெற்றது.

இந்நிலையில், ஹரியானாவில் பா.ஜ.க தனிப் பெரும்பாண்மையில் வெற்றி பெற்றதை அதன் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றி குறித்து கருத்துரைத்த நரேந்திர மோடி இது இந்திய அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

''இறுதியாக, ஜம்மு-காஷ்மீரில் அமைதியான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி,'' என்றார் அவர்.

ஜம்மு-காஷ்மீரில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தேமாக மற்றும் அதன் கூட்டணிக்கும் மோடி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் தேமாக வெற்றி பெற்றத்தை அதன் ஆதரவாளர்கள் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின், ஶ்ரீநகர் பகுதிகளில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இத்தேர்தலில் தேமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறித்து தேசிய மாநாட்டு கட்சி வெற்றி வேட்பாளர் முஷ்டாக் குரோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

''எனக்கு பெருமையாக உள்ளது. நாங்கள் மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வென்றுள்ளோம். மக்கள் மீண்டும் தேசிய மாநாட்டு கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு காரணம் தேசிய மாநாட்டு கட்சி தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் என்று அவர்களுக்குத் தெரியும்,'' என்றார் அவர்.

இந்த வெற்றி, காஷ்மீர் அதன் சொந்த அரசாங்கத்தையும், புது டெல்லியின் ஆட்சியின் கீழ் நேரடியாக இருப்பதற்குப் பதிலாக, சட்டமன்றம் என்று அழைக்கப்படும் ஒரு வட்டார சட்டமன்றத்தையும் கொண்டிருக்க அனுமதிக்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)