விளையாட்டு

2023-24 ஆம் பருவத்தின் சிறந்த ஆட்டக்காரர் போல்மர்

09/10/2024 05:15 PM

லண்டன், 09 அக்டோபர் (பெர்னாமா) -- 2023-24 ஆம் பருவத்திற்கான சிறந்த காற்பந்து ஆட்டக்காரராக இங்கிலாந்தின் கோல் போல்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

22 வயதுடைய அவர்  இங்கிலாந்தின் மற்றுமொரு ஆட்டக்காரரான ரியல் மெட்ரிட்டின் ஜூட் பெல்லிங்ஹம் மற்றும் ஆர்செனலின் புக்காயா சாக்கா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

2023-ஆம் ஆண்டு நவம்பரில் மால்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என்ற கோல்களில் வென்றபோது போல்மர் அதில் அறிமுகமானார்.

யூரோ 2024-இல் இரு கோல்களை அடித்திருக்கும் அவர், அதன் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அதேபோல, இங்கிலாந்து பிரிமியர் லீக்கிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இப்பருவத்தில் நடைபெற்ற ஏழு ஆட்டங்களில் இதவரை ஆறு கோல்களைப் போட்டிருக்கின்றார்.

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, செல்சியின் ஆட்டக்காரர் ஒருவர் மீண்டும் சிறந்த விளையாட்டாளராக தேர்வாகி உள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)