உலகம்

புளோரிடாவைக் கடுமையாகத் தாக்கிய மில்டன் சூறாவளி - 10 பேர் பலி

11/10/2024 05:07 PM

புளோரிடா, 11 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை மில்டன் சூறாவளி கடுமையாக தாக்கியதில் 10 பேர் உயிரிழந்ததோடு பெரும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

கற்று கனமழையை அடுத்து, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அங்குள்ள 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

அமெரிக்க நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை புளோரிடா  மாகாணத்தை மில்டன் சூறாவளி  தாக்க தொடங்கியிருக்கிறது. 

இந்தக் காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 120 மைலாக இருக்கும் என்று  முன்னதாகவே அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் மில்டன் சூறாவளியின் தாக்கத்தை தவிர்க்க முடியாமல் வீடுகள், கட்டிடங்கள், போக்குவரத்து என்று பல இடங்களில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 

St. Lucie County எனுமிடத்தில் வீடுகள் சேதமடைந்திருப்பது மரங்கள் வேரோடு பிடுங்கி சாய்ந்து போனது, மின்சார மற்றும் நீர் துண்டிப்புகளில் மக்கள் அவதியுறுவது போன்றவை ட்ரோன் எனும் ஆளில்லா விமான காட்சிகளுன் மூலம் பதிவாகி உள்ளது.

மூன்றாம் வகை புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த மில்டன் சூறாவளி புளோரிடாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் பெரும் சேதத்தை  விளைவித்துள்ளது 

கட்டிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சாலைகள் ஆகியவை கடும் மழையிலும் காற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன. 

மேற்கு கடற்கரையில் உள்ள பகுதிகளில்  நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

புளோரிடாவில் புதன்கிழமை இரவு வரை மில்டன்  சூறாவளி 19 முறையும் மறுநாளில்  45 முறை தாக்கி இருப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

வரும் நாட்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று  அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)