பொது

தமிழ்கூறு நல்லுலகில் முக்கிய சகாப்தமான  முருகு சுப்பிரமணியன் அவர்களின் நூற்றாண்டு விழா

21/10/2024 05:34 PM

கோலாலம்பூர், 21 அக்டோபர் (பெர்னாமா)  -எழுத்தாளராகவும் நாளிதழ் ஆசிரியராகவும் தமது படைப்புகள் மூலம் வாசகர்களைக் கவர்ந்து,  மலேசியாவில் தமிழ் மொழியின் வழியாக இந்திய சமூகத்திற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அளப்பறிய பங்காற்றியவர் முருகு சுப்பிரமணியன். 

மலையக மண்ணில் தமிழ்கூறு நல்லுலகில் முக்கிய சகாப்தமாக நினைவில் இருக்கும் அவருக்கு இவ்வாண்டு வயது 100.

அவரின் சேவைகளையும் வரலாற்றையும் நினைவுக் கூறும் வண்ணம், முருகு நூற்றாண்டு விழா நேற்று கோலாலம்பூர், செந்தூலில் நடந்தேறியது. 

முருகு சுப்ரமணியன் குடும்பத்தினரும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய இந்த நூற்றாண்டு விழாவில் 200-க்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.  

தமிழகத்தைத் தாயகமாக கொண்டு, மலேசிய தமிழர்களின் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு துணை நின்ற முருகு சுப்பிரமணியன், தமது எழுத்து பயணத்தை தமிழ் நாட்டில் தொடங்கினார். 

1953ஆம் ஆண்டு மலாயா வந்த அவர், நாட்டின் பிரபல நாளிதழான தமிழ் நேசனில் துணை ஆசிரியாக பணிப்புரியத் தொடங்கி, 1962-டில் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பேற்றார்.

அதோடு, 1963- ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு புத்துயிரூட்டி அதற்கு பல ஆண்டுகள் தலைவராகவும் இருந்திருக்கின்றார். 

இப்படி தமிழ்த்தொண்டாற்றி பலரின் நினைவுகளில் இடம் பிடித்துள்ள ஐயா முருகு சுப்பிரமணியத்திற்கு இந்த நூற்றாண்டு விழாவை நடத்துவதில் பெருமை கொள்வதாக அவர்களின் குடும்பத்தினர் கூறினர். 

''தமிழ் எழுத்திற்கும் தமிழ் பத்திரிகைகளுக்கும் நிறைய பங்காற்றியிருக்கின்றார். அவர்களுக்கு நூற்றாண்டு விழா செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இதனை வெற்றிகரமாக செய்துக் கொண்டிருக்கிறோம். தம்பி கலைமாணி இந்நிகழ்ச்சியை செய்வதற்கு ஆலோசனை வழங்கினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து செய்கிறோம். ஏனென்றால், எனது தந்தைதான் அதற்கு முதல் தலைவராக இருந்தார்,'' என்று அவரது மூத்த புதல்வர் செல்வம் சுப்பிரமணியன் கூறினார்.

''மாமனாருக்கான செய்ய வேண்டிய கடமையாக நான் கருதுகிறேன். தமது 58ஆவது வயதில் இவ்வுலகைவிட்டு பிரிந்தார். இப்போதுவரை இருந்திருந்தால் அவருக்கு 100 வயது. இந்த நேரத்தில் அவர்களுக்கு செய்வதை நாங்கள் திருப்தியாகவும் பெருமையாகவும் கருதுகிறோம்,'' என்றார் அவரது மருமகள் சந்திரா செல்வம். 

இதனிடையே, தமிழ் நேசன் நாளிதழிலில் இருந்து விலகிக் கொண்ட முருகு சுப்பிரமணியன் 1977ஆம் ஆண்டு புதிய சமுதாயம் எனும் இதழைத் தொடங்கினார்.

அப்போது, அவருடன் பணியாற்றிய அனுபவங்களையும் சேவைகள் குறித்தும் சிலர் பெர்னாமாவிடம் பகிர்ந்துக் கொண்டனர்.

''அவர் தமிழ் நேசன் பத்திரிகையில் இருந்த போது முருகுவைக் கேளுங்கள் என்ற பகுதி இருந்தது. அதே பகுதி, புதிய சமுதாயம் பத்திரிக்கையிலும் இடம் பெற்றது. வாசகர்களின் கேள்விக்கு பதில் எழுதிக் கொண்டிருந்தார். அவர் சொல்வதற்கு இணங்க நான் பதில் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது நினைத்தால் கூட மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது,'' என்றார் இராமதாஸ் மனோகரன்.

''புதிய சமுதாய பத்திரிக்கையில் திருக்குறள் தொடர்பான கட்டுரைகளை அவர் எழுதி வந்தார். அந்தக் கட்டுரையை அவர் படிக்க படிக்க, நான் எழுதிக் கொடுப்பேன். அது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம்,'' என்கிறார் இரா.முத்தரசன்.

''இந்த சமூகத்தில் சீர்த்திருத்தங்கள் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனைக்குரிய ஆளுமையாக அவர் விளங்கியிருக்கின்றார். அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும்ம் சிந்தனை ஆற்றல் மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்து, அதன் வழி இலக்கியமும் தமிழ் பண்பாடும் வளர வேண்டும் என்ற திட்டங்களை வகுத்து செயல்பட்ட மிகப் பெரிய ஆளுமையாக முருகு சுப்பிரமணியன் திகழ்ந்தார்கள்,'' என்றார் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ. ராஜேந்திரன்.

இவ்விழாவில், முருகு சுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் மற்றும் அவரின் சேவைகள் அடங்கிய  www.murugusubramaniam.org என்ற அகப்பக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)