கோலாலம்பூர் , 29 அக்டோபர் (பெர்னாமா) -- பண்டிகை காலங்களில், கார்களில் குடும்ப உறவுகளுடன் சேர்ந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவது ஒருவித மகிழ்ச்சி என்றால், பொது போக்குவரத்தில் தனியாகவோ, நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனோ கதைகள் பேசியவாறு மேற்கொள்ளப்படும், அமைதியான பயணத்திலும் ஒருவித மகிழ்ச்சி இருக்கும்.
தீபாவளிக்காக குடும்ப உறவுகளை சந்திக்கப் போகும் ஆர்வமும் எண்ணமும் பயணிகளுக்கு அலாதியாகி இருந்தாலும், முன்கூட்டியே பயண சீட்டு வாங்குவது, போக்குவரத்துக்கு காத்திருப்பது போன்றவற்றால் அவர்கள் களைப்படையவும் நேர்ந்தது.
ஆயினும், உற்சாகத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பச் செல்ல தயாரான பொது மக்களின் பயண நிலவரங்களை, இன்று கே.எல் சென்ட்ரலில் இருந்து, பெர்னாமா செய்திகள் கொண்டு வருகிறது.
தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், மக்கள் பரபரப்பான பயணத்தை மேற்கொள்வதை காண முடிந்தது.
சொந்த வாகனத்தில் பயணிப்பதற்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு இரயில் சேவை போன்ற பொது போக்குவரத்து சேவை உறுதுணையாக இருப்பதாக சிலர் பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.
இதனிடையே, வெகு நாட்களுக்கு பின்னர், சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் சற்று ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
''இரயில் சேவையை பயன்படுத்துவது எங்களுக்கு வசதியாக உள்ளது. சாலை நெரிசலில் சிக்க வேண்டியதில்லை. பாதுகாப்பாகவும் உணர்கிறோம்,'' என்றார் சவிந்ராஜ் அழகா.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவில்லை என்றாலும் தீபாவளி கொண்டாடும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு பயணத்தை மேற்கொள்வதாக பேபியன் ஜோய் கிருஷ்தப்பர் என்பவர் தெரிவித்தார்.
''நாங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடடுவதில்லை. ஆனால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்ற மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது,'' என்றார் அவர்.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதால், இதர இனத்தவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுத்துக் கொண்டு நீண்ட விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு திரும்புவதையும் இங்கு காண முடிந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)