பொது

அனைத்து துறைகளிலும் வழங்கப்படும் வாய்ப்பினை இந்திய சமூகம் முறையாகப் பெற்று பலன் பெற வேண்டும்

21/10/2024 08:17 PM

கோலாலம்பூர், 21 அக்டோபர் (பெர்னாமா) -- 2025-ஆம்  ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில  இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 13 கோடி ரிங்கிட் நாட்டிலுள்ள ஏழு விழுக்காடிற்கும் அதிகமாக இருக்கும் சமுதாயத்திற்கு போதுமானதா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், மித்ரா மற்றும் தெக்குன் மூலமாக ஒதுக்கப்பட்ட அந்த 13 கோடி ரிங்கிட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து துறைகளிலும் குறிப்பாக கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் பிரதமர் ஒதுக்கியிருக்கும்..

மிகப் பெரிய ஒதுக்கீட்டைப் பெறுவதில் இந்திய சமூகம் சிந்தனை மாற்றம் கொண்டிருக்க வேண்டும் என்று ஒருமைப்பாட்டு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

''இன்று இருக்கக்கூடிய உலக சூழலிலும் பதட்ட நிலையிலும் பாதுக்காப்புக்கென்று பெரிய மானியம் ஒதுக்க வேண்டிய கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பொது மருத்துவமனைகளின் மேம்பாடு, போதுமான மருத்துவ வசதிகள், புதிய மருத்துவ கையாளுமை ஆகியவற்றை மேம்படுத்துவதன் வழி ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய இந்திய மக்கள் உட்பட அனைவரும் அதில் பயன்பெறுவார்கள்,'' என்று அவர் கூறினார்..

இவற்றுடன், தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்து இடைநிலைப்பள்ளியிலும் பயிலும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு AI, புதிய தொழில்நுட்பவியல், இலக்கவியல் உருமாற்றம் போன்ற திட்டங்களில் அரசாங்கம் முறையாக பயிற்சி அளிக்கும் போது அதிலும் இந்திய மாணவர்கள் முறையாக பலன் பெறுவதாக செனட்டர் சரஸ்வதி தெரிவித்தார். 

ஒவ்வோர் இனத்தின் சமயம், கலை, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை முன்னிறுத்தியே வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தாய்மொழிப்பள்ளிகளுக்கு என்று பிரதமர் தனியாக மானியம் அறிவிக்கவில்லை என்றும் சரஸ்வதி விளக்கினார். 

ஆனால், அந்த மானிய மற்றும் அது சார்ந்த வளர்ச்சிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்று சமுதாயத்திற்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாட்டை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொண்டிருப்பதாக  அவர் தெரிவித்தார். 

''அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதா? உதாரணத்திற்கு கடந்தாண்டு பள்ளிகளின் கழிப்பறை மேம்பாடு செய்வதற்கோ அல்லது அதை சீரமைப்பதற்கோ அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி எத்தனைப் பள்ளிகளில் நிறைவேற்றப்பட்டது? இவற்றை நாடாளுமன்றத்தில் கேட்பதற்குத்தான் நாடாளுமன்ற பிரதிநிதிகள் உள்ளனர். போகிற போக்கில் சொல்லிச் செல்லும் பதிலாக அது இல்லாமல், நேர்த்தியான முறையில் நாடாளுமன்றப் பதிவேட்டில் சொல்லப்படுகின்ற ஒரு கேள்வியாக இருக்கும். இது குறிப்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையாய கடமையாகும்,'' என்றும் அவர் விவரித்தார்.

அதேபோல அனைத்து தேவைகளுக்கும் மித்ரா போன்ற ஓர் அமைப்பை மட்டும் சுட்டிக்காட்டாமல், இதர துறை மற்றும் அமைச்சுகளிலும் இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள உதவிகளை சமுதாயத்தினர் பெறுவதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணைப் புரிய வேண்டும் என்றும் சரஸ்வதி கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, அடிப்படை சம்பளம் 1,500-ரிலிருந்து 1,700-க்கு உயர்வு கண்டிருப்பது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

''இந்த அடிப்படை சம்பளம் 1,700 ரிங்கிட் என்பது தொழில்திறன் பயிற்சிகளைப் பெறாதவர்களுக்கு. தொழில்திறன் பயிற்சியில் கலந்து கொண்டு தங்களின் உற்பத்தித் திறனை மலேசியர்கள் வலியுறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் தொடந்து கேட்டுக் கொண்டு வருகிறது. அவ்வாறு உற்பத்தித் திறனை வளர்த்து கொண்டவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,290 ரிங்கிட்டை தாராளமாக வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது,'' என்றார் அவர்.

தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும் என்பதை முன்னிறுத்தி பிரதமர் இந்த அறிவிப்பை செய்ததாக...

இன்று பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்க்காணலில் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)