சிறப்புச் செய்தி

ஊடகப் பணியாளர்களின் தீபாவளி அர்ப்பணிப்பு

30/10/2024 08:43 PM

கோலாலம்பூர், 30 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி குதூகலத்தில் திளைத்திருப்பவர்களுக்கு மத்தியில் குடும்பங்களை விட்டு, கொண்டாட்டங்களை மறந்து, பணிக்காக தங்களை அர்ப்பணிப்பவர்களும் நிச்சயம் நம்மிடையே உள்ளனர்.

சுகாதாரத் துறை, போலீஸ், தீயணைப்புத் துறை போன்ற நாட்டின் முன்கள பணியாளர்களின் வரிசையில் அடுத்து ஊடகவியலாளர்கள், அதிலும் தமிழ்த் துறையில் பணியாற்றும் ஊடக நண்பர்களுக்கு வேலையிலிருந்து விலக்கு என்பது சற்று சாத்தியமற்ற ஒன்றே.

இந்நிலையில், அவர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும்கூட கேட்டறிந்து பதிவு செய்தது பெர்னாமா செய்திகள்.

ஆண்டுக்கு 365 நாள்களும் ஓயாமால் உழைக்க வேண்டும் என்பது ஊடகத் துறையின் சமூக கடப்பாடாகும்.

இன்றைய சூழலில், சமூக ஊடகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் நிலையில், அதன் சவால்களையும் உடன் சுமந்து உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடும் அரசாங்கத்தின் பெர்னாமா, ஆர்.டி.எம் மற்றும் தனியார் தொலைகாட்சியான ஆஸ்ட்ரோ போன்ற தேசிய ஊடகங்களின் பங்கு அளப்பரியது.

அண்மையத் தகவல், உலக நடப்புகள், அரசியல், அரசாங்கம், தலைமைத்துவம் என அனைத்தையும் கோர்த்து மக்களிடம் சேர்க்கும் பணி போற்றுதலுக்கு உரியது என்றாலும், அதன் பின்னணியிலிருந்து அனைத்தையும் பிழையற தொகுத்து சரியான தகவலை அவ்வப்போது வெளியிடுவதில் ஊடகப் பணியாளர்களின் நேரங்காலமற்ற தியாகங்களும் எண்ணிலடங்கா.

பெருநாள்காலங்களில், விடுமுறையின்றி பணி புரியும் அர்ப்பணிப்பும் அதில் ஒன்று.

அதேவேளையில், சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளிவைத்து, தங்களின் குரலில் சற்றும் தொய்வில்லாமல் மக்களை மகிழ்விப்பதில் வானொலி அறிவிப்பாளர்களின் பங்கையும் நாம் மறக்க முடியாது.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வரிகள் பெருநாள் காலங்களில் தகவல்களைத் தொகுத்து வழங்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகத் துறையினருக்கும் மிகவும் பொருத்தமாகும்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]