பொது

'புருவாஸ் 32' தோட்டத்தின் மண்வாச தீபாவளி

29/10/2024 06:19 PM

புருவாஸ், 29 அக்டோபர் (பெர்னாமா) -- பால்மரங்களுக்கும் செம்பனை மரங்களுக்கும் இடையே உரத்தோடு உரிமையையும் கலந்து உறவுகளின் சங்கமத்திற்கு உயிரூட்டிய தோட்டத்து வாழ்க்கை 'சொர்க்க வாசல்' என்பது அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.

ஆனால், தற்போது பெரும்பாலான தோட்டங்களின் பாரம்பரியம் மாறி, சுற்றி வாழ்ந்த சுற்றங்கள் இன்றி, மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டாலும் கடந்த கால நினைவுகளை அசைபோட்டபடி பெருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர் பெரும்பாலான உட்புற பகுதிகளில் வாழும் மக்கள்.

அவற்றில், ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான இந்தியக் குடும்பங்களை தன் மடியில் தாங்கி தாலாட்டிய பேராக், 32 புருவாஸ் தோட்டத்தின் தீபாவளிக் கொண்டாட்டம், இன்றும் ஆடம்பரம் இல்லாத ஆனந்தத் தீபாவளியாகத்தான் உள்ளது.

பேராக், கோப்பெங்கிலிருந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வடக்கு நோக்கிப் பயணித்தால் 32 புருவாஸ் தோட்டத்தை வந்தடையலாம்.

தைப்பிங்கிலிருந்து வரும்போது, இத்தோட்டம் 32ஆவது மைல்கல்லில் அமைந்துள்ளதால், இதற்கு '32 புருவாஸ் தோட்டம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது

நூற்றாண்டு பழைமையான இத்தோட்டத்தில் அப்போது பால்மரம் வெட்டுதலும், ரப்பர் உருவாக்க நடவடிக்கையுமே மூலத் தொழிலாக இருந்துள்ளது.

கால மாற்றத்தில் இப்பகுதியில் இடைநிலை மற்றும் உயர்க்கல்வியை முடித்த பெரும்பாலான இளைஞர்கள், சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று விட்டதால்...

தற்போது 12 குடும்பங்கள் மட்டுமே அங்கு வசிக்கும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு, தேவராஜ் - விஜயா இல்லமும் வண்ண வண்ண சாயங்களாலும் வாழ்த்து அட்டைகளின் அலங்கரிப்புகளாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது.

''ஆண்டுதோறும் வாழ்த்து அட்டைகள் ஒட்டியே நாங்கள் வீட்டை அலங்கரிப்போம். என்னதான் நவீன வாழ்க்கையில் குறுஞ்செய்தி அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக தீபாவளி வாழ்த்தை அனுப்பினாலும், இத்தகைய வாழ்த்து அட்டைகளில் சில கேலி வார்த்தைகளைப் பயன்படுத்தி கிண்டல் செய்யும் சுகமே தனி எனலாம்,'' என்று ஒரு நிறுவனத்தில் மனிதவள துறையில் பணியாற்றி வரும் தங்கம் அருணகிரி தெரிவித்தார். 

ஸ்டிக்கர் கோலம், நெகிழி தோரணம் என்று சிலர் செயற்கைக்கு மாறிவிட்ட சூழலிலும் இன்னமும் இங்குள்ள மக்கள், மா-கொழுந்திற்கும் பச்சைத் தோரணத்திற்கும் அரிசியை அரைத்து அதில் இடும் வண்ணக் கோலத்திற்கும் முக்கியத்துவம் அளித்து பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடுவதில் தனி மகிழ்ச்சி என்கின்றனர்.

''வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியே குறுத்தோலைகளால் பின்னப்பட்ட தோரணத்தை வாசலில் கட்டுவர். அவற்றிற்கு நடுவில் மாவிலையைக் கட்டுவதற்கு காரணம், அந்த இலையில் உயிர்வளி அதிகம் இருப்பதோடு, அதில் மஞ்சளும் குங்குமமும் கலக்கும் போது கிருநாசினியாகவும் அது மாறுகிறது,'' என்று அகிலா கருணாநிதி தெரிவித்தார்.

மேலும், எண்ணெய்க் குளியலின் உண்மையான அர்த்தத்தையும் தோட்டத்து தீபாவளி உணர்த்தியது.

''ஆண்டுதோறும் பிள்ளைகள் வெளியில் நடுமாடுவார்கள். அதனால் உடலில் அதிகமான உஷ்ணம் ஏறியிருக்கும். ஆக இன்றைய தினத்தில் பிள்ளைகளுக்கு எண்ணெய்த் தேய்த்துவிட்டால் அவர்கள் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேறி கூடுதல் ஆரோக்கியமாக இருப்பார்கள். இது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பேரப்பிள்ளைகளுக்கும்கும் சேர்த்துதான்,'' என்று 67 வயதுடைய பரமேஸ்வரி சங்கரலிங்கம் கூறினார்.

என்னதான் பைகளில் அடைக்கப்பட்ட 'ரெடிமெட்' பலகார மாவுகள், தயாரிப்பதற்கு இலகுவாக இருந்தாலும், அம்மிக்கல், ஆட்டுக்கல், எந்திரக் கல், உரல் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் பலகாரங்களில், சுவையோடு சத்தும் அதிகளவு நிறைந்திருக்கும் என்கின்றனர் அவ்வீட்டின் தாய்மார்களான விஜயா சுப்பிரமணியம், அம்மாக்கண்ணு கிருஷ்ணன்,வள்ளி பச்சையப்பன்,சாந்தகுமாரி நடராஜன் ஆகியோர்.

இவற்றுடன், சிற்றுருண்டை, கெட்டி உருண்டை, பனியாரம், அதிரசம், சிப்பி, காரப்பொடி போன்ற மறக்கப்பட்ட பல பலகாரங்களும் இன்னமும் இதுபோன்ற உட்புறப் பகுதிகளில் மணம் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

32 புருவாஸ் தோட்ட மக்கள், உற்றார் உறவினர்களோடும் நண்பர்களுடனும் இணைந்து பண்பாடும், கலாச்சாரமும் மாறாத அர்த்தமுள்ள தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வதைப் பார்க்கையில், அந்த கால வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா என்று பலரையும் ஏக்கத்தோடு பெருமூச்சுவிட வைக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)