உலகம்

கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி தெலுங்கானாவில் யாகம்

30/10/2024 07:48 PM

தெலுங்கானா, 30 அக்டோபர் (பெர்னாமா) --   வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டின் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் யாகம் வளர்த்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்காக ஷியாமளா கோபாலன் கல்வி அறக்கட்டளை, இந்த 11 நாள் பிரார்த்தனை மற்றும் யாகத்தையும் ஏற்பாடு செய்தது.

தெலுங்கானாவில் உள்ள பத்ராதி கோராகுடம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த யாகம் நேற்றோடு நிறைவடைந்தது.

பாலோஞ்சா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.

கமலாவின் தாயாரான, உயிரியல் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் ஷியாமளா, 1958 ஆம் ஆண்டு தமது 19-வது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

அவரின் நினைவாக இயங்கும் ''ஷியாமளா கோபாலன் கல்வி அறக்கட்டளை" இந்த பிரார்த்தனையை ஏற்று நடத்தியது.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று பெருமைக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார்.

கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்டு டிரம்ப்க்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)