ஈப்போ, 31 அக்டோபர் (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஈப்போ கல்லுமலை அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலும் பக்தர்கள் புடை சூழ தீபாவளி சிறப்புப் பிரார்த்தனை இனிதே நடைபெற்றது.
''பார்ப்பதற்கு ஒரு குட்டி தைப்பூசம் போல காட்சி தந்தது. மாலையில் இன்னும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. வந்திருந்த சிறுவர்கள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என்று அனைவருமே பாரம்பரிய உடையணிந்து வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்று ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா செயலாளர் வே.மு.தியாகராஜன் தெரிவித்தார்.
தீபத் திருநாளில் தங்களின் இல்லங்களில் வழிபாடுகளை முடித்து பின்னர், ஆலயத்திற்கு வருகைப் புரிந்திருந்த அனைவருமே பாரம்பரிய உடையில் காணப்பட்டனர்.
''ஆலய வழிபாட்டுடன் இன்றைய தினத்தை தொடங்குவதே இனிதாக இருக்கும். அதனால்தான் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருக்கிறேன். எங்களைப் போன்று நிறைய பேர் இங்கு வந்திருப்பதைப் பார்க்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆலயத்திற்கு வருகை புரிந்திருந்த பக்தர்களில் சிலரான இந்திரன் சந்திரன், கேசவன் துரைசாமி, நிஷாந்தினி தினகரன், பண்பரஸ் அம்பிகாபதி,எஸ்.இராஜேந்திரன்,சுகுமாரன் பெரியசாமி,விஜயலெட்சுமி இராஜமணி சரஸ்வதி ஆகியோர் தெரிவித்தனர்.
பிற்பகலைக் கடந்தும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)