ஜெனிவா, 02 நவம்பர் (பெர்னாமா) -- காசாவில் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் UNRWA, மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உலக சுகாதார நிறுவனம், WHO தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் கொண்டுள்ள பொறுப்புகளை, இச்செயல் மீறியிருப்பதாக, WHO தலைவர் தெட்ரோஸ் கெப்ரியெசுஸ் கூறியிருக்கிறார்.
"UNRWA இன் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் முடிவு அந்நாட்டின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு முரணானது. இது அத்தியாவசிய சேவைகளை நம்பியிருக்கும் அனைவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இத்தடை இஸ்ரேலை பாதுகாப்பானதாக மாற்றாது. இது காசா மக்களின் துயரங்களை அதிகரிக்கும் மற்றும் நோய் பரவும் அபாயத்தை அதிகரிக்கும், '' என்றார் அவர்.
ஐ.நா.வின் உதவி நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தடை செய்யும் சட்டத்தை கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி இஸ்ரேல் நிறைவேற்றியது.
காசாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை இச்சட்டம் பாதிக்கும்.
இதனிடையே, காசாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் போலியோ தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தற்போது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தெட்ரோஸ் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)