மணிப்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ஆயுதம் ஏந்திய 10 பேர் கொல்லப்பட்டனர்.
திங்கட்கிழமை போலிஸ் நிலையத்தைத் தாக்க முயன்றபோது அவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"சுமார் 45 நிமிட (துப்பாக்கிச் சூட்டு சண்டையில்) அதிகமானோர் உயிரிழந்ததை கண்டறிந்தோம். சுமார் 10 பயங்கரவாதிகள் இறந்து கிடந்தனர். இரண்டு முதியவர்கள் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மூன்று பெண்களும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர்," என்று மணிப்பூர் மாநில போலீஸ் படை தலைவர் இம்மானுவேல் முய்வா தெரிவித்தார்.
இம்பாலில் உள்ள ஒரு கிராமத்தில், மோட்டார் குண்டுகள் மற்றும் குண்டு துளைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்த வீடுகளைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் பணியாற்றி வருவதைக் காண முடிந்தது.
"அவர்கள் (பயங்கரவாதிகள்) இங்கு வந்து அனைத்தையும் அழித்தனர். பல வீடுகளை அவர்கள் எரித்தனர். 12 வீடுகள் தீக்கிரையாகின. இன்னும் பல உடைந்துள்ளன. அதிகமான குண்டு துளைகள் உள்ளன," என்று உள்ளூர்வாசியான கோஜென் கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
கூகி அனுபவித்து வரும் அரசு வேலைகள் மற்றும் கல்விக்கான ஒதுக்கீடுகளையும் சிறப்பு பொருளாதார சலுகைகளையும் மெய்திக்கும் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவ்விரு சமூகத்தினருக்கும் இடையே சண்டைகள் நீடித்து வருகின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)