பொது

இந்திய முஸ்லிம் உணவகங்களில் இப்போதைக்கு விலை உயர்த்தப்படாது - பிரெஸ்மா

13/11/2024 06:11 PM

கோலாலம்பூர்,13 நவம்பர் (பெர்னாமா) --  உணவின் விலையை உயர்த்தும் எண்ணம் இப்போது தங்களுக்கு துளியும் இல்லை என்று PRESMA எனும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்திய முஸ்லிம் உணவகங்களை உட்படுத்திய ஒரு சங்கம் உணவின் விலையைக் கணிசமாக உயர்த்தவிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டது தொடர்பில், கருத்துரைத்தபோது, PRESMA தலைவர் டத்தோ ஜவஹர் அலி தைப் கான் அதனை உறுதிப்படுத்தினார்.

''பிரதமரின் கோட்பாடிற்கு இணங்க நாட்டு மக்களின் குறிப்பாக வசதி குறைந்த மக்களின் நலன் காப்பதில் பிரெஸ்மா எப்போதும் முனைப்போடு செயல்படும். அந்த வகையில் அரசாங்கத்தின் எவ்வித அறிவிப்பும் இன்றி தான் தோன்றித் தனமான முறையில் உணவுப் பொருட்களின் விலையை பிரெஸ்மாவின் கீழ் செயல்படும் உணவகங்கள் அதிகரிக்காது. எனவே இவ்விவகாரம் குறித்து பொதுமக்கள் தேவையற்ற விமர்சனங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஜோகூர் மாநிலத்தில் உள்ள இந்திய முஸ்லிம் உணவகங்களில், அடுத்தாண்டு முதல் உணவின் விலையை ஐந்து விழுக்காட்டுக்கு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக, அம்மாநில இந்திய முஸ்லிம் வர்த்தக சங்கம் தெரிவித்திருந்தது.

அச்செய்தி ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் எழுந்தன.

அது அவர்களின் சுய கருத்து என்று கூறிய டத்தோ ஜவஹர் அலி, அச்செய்திக்கும் பிரெஸ்மாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

எனவே, அரசாங்கத்திடமிருந்து அடிப்படை உணவுப் பொருட்கள், காய்கறிகள், கோழி, மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றின் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வரும் வரையில், பிரெஸ்மாவின் கீழ் செயல்படும் அனைத்து உணவகங்களிலும் உணவின் விலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஜவஹர் அலி பெர்னாமா செய்திகளிடம் உறுதியாகக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)