கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- நேற்றிரவு மணி 11.30 அளவில் கோலாலம்பூர், ஜாலான் இம்பியில் உள்ள குடியிருப்பு பகுதியில், நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள 44 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்து திருடியதாக நம்பப்படும் வியட்நாமைச் சேர்ந்த நான்கு ஆடவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புக்கிட் அமான் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த போலீஸ் குழு, அக்குடியிருப்பின் 17-ஆவது மாடியில் அதிரடி சோதனை மேற்கொண்டபோது, சந்தேக நபர்கள் போலீசாரை நோக்கி முதலில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா கூறினார்.
''அந்நடவடிக்கை தொடரப்படாமல் இருக்க தன்னைத் தற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச் சூட்டில் வியட்நாமைச் சேர்ந்த 40 வயதுக்குற்பட்ட நான்கு ஆடவர்களைப் போலீசார் சுட்டு வீழ்த்தியது,'' என்றார் அவர்.
போலீசார் மீது தாக்குதல் நடத்த, அவர்கள் இரு கத்திகளையும் இரு துப்பாக்கிகளையும் வைத்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
2018-ஆம் ஆண்டு தொடங்கி, 43 லட்சம் ரிங்கிட் நஷ்டத்தை உட்படுத்தி, கோலாலம்பூரில் 28 வழக்குகள் மற்றும் சிலாங்கூரில் 16 வழக்குகளில், அந்நால்வரும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இரவு நேரங்களில் ஆளில்லா அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளைக் குறிவைத்து, அதன் கதவுகளை உடைத்து திருடும் நடவடிக்கைகளில் அந்நால்வரும் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் உடல், கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)