உலகம்

இரண்டாம் தவணைக்காலம் முடியும்வரை தீர்ப்பு ஒத்திவைப்பு

20/11/2024 07:40 PM

வாஷிங்டன், 20 நவம்பர் (பெர்னாமா) -- அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப் மீதான முறைகேடான பணப் பரிவர்த்தனை வழக்கைக் கைவிட முடியாது என்று நியூயார்க் அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதிலாக அதிபருக்கான அவரது இரண்டாம் தவணைக் காலம் முடியும் வரை தீர்ப்பை ஒத்திவைக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றி தவறான செய்திகளை மறைக்கத் டிரம்ப் பணம் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அதன் தொடர்பில் அவர் 34 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார்.

அவர் அதிபரானதால் அவர் மீது ஏற்கெனவே உள்ள வழக்கைக் கைவிடவேண்டும் என்று அர்த்தமாகிவிடாது என்று மன்ஹேட்டன் மாவட்டத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது.

அந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 26ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இதற்கு முன்னர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அவருக்கு நான்காண்டுச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவரது வழக்கறிஞர்கள் அந்த வழக்கை முறியடிக்கத் தொடர்ந்து போராடுகின்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)