சிறப்புச் செய்தி

நாற்பதிலிருந்து 70 வயதிற்குட்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கருப்பை புற்றுநோய்

20/11/2024 08:11 PM

கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) -- கருப்பை புற்றுநோயினால் மலேசியா உட்பட உலகம் முழுவதும் 11 நாடுகளில் பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவைப் பொருத்தவரையில் பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் இது ஐந்தாம் இடத்தில் உள்ளது.

நாற்பது வயதில் இருந்து 70 வயதிற்குட்பட்ட பெண்கள், இந்தக் கருப்பை புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறுகிறார் கருவுறுதல் சிகிச்சை நிபுணரும் மகப்பேறு மருத்துவருமான டாக்டர் அகிலன் அர்ஜுனன்.

வயது, குடும்ப மரபணு உட்பட சில காரணங்களால் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுகின்றது.

குடும்பத்தில் நெருங்கிய உறவுகளான பாட்டி, அம்மா, அக்கா போன்றவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களின் அடுத்த தலைமுறையினரும் இந்நோயினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சுகாதார பரிசோதனைகள் வாயிலாகவே இந்நோய்க் கண்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும் என்கிறார் டாக்டர் அகிலன் அர்ஜுனன்.

''நீங்கள் BRCA மரபணுவைக் கொண்டிருந்தால் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு ஆபத்துகள் உள்ளது. நிறைய பெண்களுக்கு ENDOMETRIOSIS இருப்பது தெரியாது. ஏனென்றால், அதனைக் கண்டறிவது கடினம். ENDOMETRIOSIS இருந்தால் இந்நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். அடுத்ததாக, HORMONE REPLACEMENT சிகிச்சையை மாதவிடாய் முடிந்த பெண்கள் மேற்கொள்வர். அவர்களுக்கு இதன் பாதிப்புகள் ஏற்படும்,''என்றார் அவர்.

கருப்பை புற்றுநோய் பாதிப்பு முதல் அல்லது இரண்டாவது கட்டத்தில் இருந்தால் அதற்கான அறிகுறிகள் தென்படாது.

மாறாக, மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத்தில் அறிகுறிகளை உணர முடியும் என்பதால் பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் மகப்பேறு பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் அகிலன் அறிவுறுத்தினார்.

''ULTRASOUND பரிசோதனைகள் மிகவும் அவசியம் கருப்பைக்கு. ஆபத்துகள் இருப்பதை அறிய ஒவ்வோர் ஆண்டும் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத்தில் உணவுகளை உட்கொள்வதில் சிரமம் ஏற்படும். சில வேளைகளில், சிறுநீரகம் கழிப்பது அதிகமாக இருக்கும். வயிறு அதிகமாக வலிக்கும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக, முதுமை வயது காலக்கட்டத்தில்,''என்றார் அவர்.

இதனிடையே, இந்தக் கருப்பை புற்றுநோயின் நிலையைப் பொருத்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும்.

ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறும் போது அதற்கான பலனை காண முடியும்.

''கருப்பை புற்றுநோயின் முதல் கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கருப்பையை அகற்றிவிட்டால் நோயை குணப்படுத்த முடியும். சில வேளைகளில், நோய் பரவியிருந்தாலும் முதல் கட்டத்தில் கூட இராசயண சிகிச்சை (CHEMOTHERAPY), கதிரியக்க சிகிச்சை (RADIOTHERAPY) தேவைப்படும். அதுவே இறுதிக்கட்டத்தில் நோய் மோசமடைந்துவிட்டால் குணப்படுத்துவது கடினம்,''என்றார் அவர்.

எனவே, பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் மகப்பேறு பரிசோதனையை மேற்கொண்டால் இந்நோயின் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும் என்று டாக்டர் அகிலன் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)