பொது

சுங்கை கோலோக் வழியைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் கைது செய்யப்படுவர்

24/11/2024 05:42 PM

பாசிர் மாஸ், 24 நவம்பர் (பெர்னாமா) -- டிசம்பர் முதலாம் தேதி தொடங்கி, நாட்டின் எல்லையைக் கடக்க, சுங்கை கோலோக் ரந்தாவ் பஞ்சாங் சட்டவிரோத வழியைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் கைது செய்யப்படுவர்.

கிளந்தானில், மலேசியா - தாய்லாந்து எல்லையைக் கடக்க மூன்று நுழைவாசல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு மன்றத்தின் துணை தலைமை இயக்குனர் ஹம்சா இஷாக் தெரிவித்தார்.

எனவே, ரந்தாவ் பஞ்சாங்கில் பள்ளிகளில் பயிலும் மாணவர் உட்பட அண்டை நாடுகளுக்குச் செல்ல சட்டவிரோத வழியைப் பயன்படுத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

இன்று கிளந்தான், ரந்தாவ் பஞ்சாங்கில் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் மூன்று மணி நேரம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹம்சா இஷாக் தெரிவித்தார்.

ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் தாய்லாந்திலும், மலேசியாவிலும் வசிப்பதால் அது குறித்து ஒரு வழிமுறையை ஆலோசிக்க தமது தரப்பு கல்வி அமைச்சுடன் விவாதிக்கவுள்ளதாக ஹம்சா மேலும் கூறினார்.

தாய்லாந்து - மலேசிய எல்லையில் நுழைவாசலைப் பயன்படுத்த அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றுள்ள மூன்று வழிகளை மட்டுமே கிளந்தானில் பயன்படுத்த முடியும் என்பதை அவர் மீண்டும் நினைவூட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)