பொது

5 லட்சம் மதிப்புடைய கடத்தல் மதுபானங்கள் பறிமுதல்

25/11/2024 04:10 PM

கோத்தா கினாபாலு, 25 நவம்பர் (பெர்னாமா) --   கடந்த மாதம், சபா, கோத்தா கினாபாலு மற்றும் பியூஃபோர்ட் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் ஐந்து லட்சத்து இருபத்து எட்டாயிரத்து எண்பத்து இரண்டு ரிங்கிட் மதிப்புடைய மதுபானங்கள் கடத்தும் நடவடிக்கையை அம்மாநில அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்தது.

அக்டோபர் பத்தாம் தேதி, செப்பங்கர் துறைமுக கொள்கலன் ஒன்றில் தமது தரப்பு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் முதல் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சபா வட்டார சுங்கத் துறை துணைத் தலைமை இயக்குநர் சித்தி மாங் தெரிவித்தார்.

''சோதனை நடவடிக்கையில் 23,760 லிட்டர் மதுபானங்களைக் கொண்ட 3,000 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. கொள்கலனில் ஏற்றப்பட்ட மதுபானங்கள் 368,375 ரிங்கிட் 04 சென் வரியை உட்படுத்திய 90,050 ரிங்கிட் 40 சென் மதிப்புடயவை என்று கணிக்கப்பட்டுள்ளது'', என்று அவர் கூறினார்.

அக்டோபர் 24-ஆம் தேதி, பியூஃபோர்ட், ஜாலான் படாஸ் வெள்ளி கம்போங் லுவாகன் சங்கினனில் உள்ள கிடங்கு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் வழி இரண்டாம் பறிமுதல் நடவடிக்கை நடத்தப்பட்டதாக சித்தி கூறினார்.

1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் செக்‌ஷன் 135-இன் கீழ் இவ்விரு சம்பவங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)