பொது

OP TIRIS 3.0 நடவடிக்கை; 11 மாதங்களில் 8 கோடி ரிங்கிட்டுக்கும் மேலான பொருள்கள் பறிமுதல்

25/11/2024 05:27 PM

அலோர் காஜா, 25 நவம்பர் (பெர்னாமா) --   ஜனவரி முதலாம் தேதி தொடங்கி நவம்பர் 22-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட Op Tiris 3.0 சோதனை நடவடிக்கை வழி 8 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் 39,069 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2,521 வழக்குகளில் உள்ளூர் மற்றும் அந்நிய நாட்டவர்களை உட்படுத்தி 604 பேர் கைது செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி செப்டம்பர் 23-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட Op Kesan நடவடிக்கை வழி 50,725 கடைகள் சோதனை செய்யப்பட்ட வேளையில், நாடு முழுவதும் 106 புகார்கள் பெறப்பட்டதாக டத்தோ அர்மிசான் கூறினார்.

இதனிடையே, அதிகமான மக்கள் தொகை, அதிகரிக்கும் வணிக வளாகங்களின் எண்ணிக்கை, தளவாட சிக்கல்கள் ஆகிய சவால்களை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு எதிர்நோக்கி வருவதாகவும் அர்மிசான் தெரிவித்தார்.

''இந்த சவால்கள் இருந்தாலும், ஆரோக்கியமான மற்றும் நிலையான உள்நாட்டு வர்த்தகத்தை உருவாக்குவதற்கும், பயனீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை உறுதிப்படுத்த கே.பி.டி.என் எப்போதும் உழைக்கும்'', என்று அவர் கூறினார்.

அமைச்சு பெறக்கூடிய ஒவ்வொரு புகார் மற்றும் அறிக்கை மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவது உட்பட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அம்சங்கள் பலப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)