பொது

திறன் மிக்க நகரமாக புத்ராஜெயா நிலைத்திருக்க ஏ.ஐ அவசியம்

04/12/2024 03:43 PM

புத்ராஜெயா, 04 டிசம்பர் (பெர்னாமா) -- புத்ராஜெயாவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் முயற்சியாகவும், திறன் மிக்க நகரம் எனும் நிலைப்பாட்டை உறுதி செய்யவும், செயற்கை நுண்ணறிவு, ஏஐ-ஐ பயன்படுத்த வேண்டும்.

நிகழ்காலத்தில் போக்குவரத்து அமைப்பைக் கண்டறிதல், பயணத்தை எளிதாக்க மாற்றுப் பாதையை பரிந்துரைத்தல் உட்பட திறமையான போக்குவரத்து நிர்வகிப்பிற்கு, ஏஐ தொழில்நுட்பம் முதன்மை தேர்வாகும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயண நேரமும் கரிம வெளியேற்றமும் குறைக்கப்படுவதோடு, திறன் மிக்க நகரத்தை உருவாக்கும் புத்ராஜெயாவின் நோக்கமும் நிறைவேறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"நகரம் வளர்ச்சியடையும் போது, நாம் எதிர்நோக்கும் சவால்களில் ஒன்று போக்குவரத்து நெரிசல். புத்ராஜெயாவைப் பயன்படுத்தும் போதெல்லாம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறோம். எனவே, போக்குவரத்து பிரச்சனையை எவ்வாறு களைவது என்பதும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். அதில் ஒன்று அறிவார்ந்த போக்குவரத்து அமைப்பாகும். ஒருமைப்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர், பொதுப்பணி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆவார். அவருக்கும் ஐபிஎஸ் துறையில் மிகுந்த அனுபவம் உள்ளது. எனவே தற்போதுள்ள ஏஐ-ஐ பயன்படுத்தி நாம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பகிர்ந்து கொண்டால், போக்குவரத்து நெரிசல் பிரச்சனையைக் களைய முடியும்," என்றார் அவர்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற PUO எனப்படும் புத்ராஜெயா நகர்ப்புற இலக்கவியல் தரவு மையம், 2024-ஆம் ஆண்டுக்கான புத்ராஜெயா இலக்கவியல் கண்காட்சி மற்றும் மாநாடு,DiPEC ஆகியவற்றின் தொடக்க விழாவில் ஃபடில்லா அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)