கோலாலம்பூர், 04 டிசம்பர் (பெர்னாமா) -- இம்மாதம் டிசம்பர் முதலாம் தேதி வரை, செயற்கை நுண்ணறிவு, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 1125 ஆபாச பதிவுகளை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி அகற்றியுள்ளது.
2022-ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட 186 பதிவுகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டுகின்றது.
அதுமட்டுமின்றி, சிறுவர் பாலியல் தொடர்பான பதிவுகளும் அகற்றப்பட்ட வேளையில், 2022-ஆம் ஆண்டில் இருந்த 34 பதிவுகளைக் காட்டிலும் இவ்வாண்டு 800-ஆக அதிகரித்திருப்பதை, தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் சுட்டிக்காட்டினார்.
''எனவே தான், 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் (சட்டம் 588) மாற்ற சட்ட மசோதாவை நாங்கள் முன்மொழிந்தோம். வணிக நோக்கங்களுக்காக ஆபாச தகவல் தொடர்புகள் வழங்கியதாகக் கண்டறிபவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் மேற்போகாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்,'' என்றார் அவர்.
இன்று மக்களவையில், இளைஞர்கள் மத்தியில் ஆபாச பதிவுகள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கான சட்ட அமலாக்கம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் எழுப்பிய கேள்விக்கு தியோ அவ்வாறு பதிலளித்தார்.
இதனிடையே, இணைய மோசடி செய்பவர்களும் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தைப் பரவலாகப் பயன்படுத்துவதாக கூறிய தியோ, கடந்த 13 நாள்களில் தேசிய சட்ட துறை போல் ஆள்மாறாட்டம் செய்து முகநூலில் 274 விளம்பரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)