கோலாலம்பூர், 11 டிசம்பர் (பெர்னாமா) - சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மருத்துவராகும் கனவை நிறைவேற்றும் வகையில் இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவும் பெர்டானா பல்கலைக்கழகமும் இணைந்து 'மருத்துவர் என் கனவு' என்ற புதிய திட்டத்தினை தொடங்கியுள்ளன.
2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் எஸ்டிபிஎம் மற்றும் மெட்ரிகுலேஷன் முடித்த மாணவர்கள் சிஜிபிஏ எனப்படும் மொத்த சராசரி புள்ளி மதிப்பீட்டில் 3.5-க்கும் மேல் பெற்றிருந்தால் இத்திட்டத்திற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
"ஐம்பது மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு வழங்க தயாராக இருக்கிறோம். அதில் பத்து வாய்ப்புகள் முழு கல்வி உபகாரச் சம்பளத்தை உட்படுத்தியது. இதைப் பெறுபவர்கள் இலவசமான முறையிலே மருத்துவக் கல்வியைப் பயிலலாம். மற்ற வாய்ப்புகள் அனைத்து பாதி உபகாரச் சம்பளம் மற்றும் பிடிபிடிஎன் கல்வி உதவி நிதியுடன் தகுதி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான விண்ணப்பம் இன்று தொடங்கி இம்மாதம் 17ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்," என்று அவர் கூறினார்.
மெட்ரிகுலேஷன் முடித்த மாணவர்களுக்கு அரசாங்கத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் அவர்கள் மித்ரா வழங்கும் இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
கடந்தாண்டு அதிகமான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பின்றி தவித்ததை மித்ரா நன்கறிந்திருந்தது.
அம்மாணவர்களின் எதிர்காலமும் கல்வியும் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்ற காரணத்தால் பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மித்ரா பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன் பயனாக பெர்டானா பல்கலைக்கழகத்தின் இணை ஆதரவுடன் 50 இந்திய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை மித்ரா பெற்றுள்ளதாக பிரபாகரன் விவரித்தார்.
"இந்த வாய்ப்பை இந்தியர்கள் குறிப்பாக பி40 பிரிவினர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பெர்டானா பல்கலைக்கழகம் நேர்முகத் தேர்வு நடத்தும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் அத்தகவல்களை வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)