கோலாலம்பூர், 30 ஜூலை (பெர்னாமா) - நாட்டிலுள்ள இந்தியர்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா மூலம் இம்மாதம் வரையில் 16 உயர் தாக்கமுள்ள திட்டங்களை அங்கீகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மூன்று முக்கிய துறைகளை முன்னிறுத்தி இதுபோன்ற திட்டங்களின் மூலம் மக்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கல்வி மற்றும் பயிற்சி, ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுடன் சமூக நல்வாழ்விலும் முதன்மை கவனம் செலுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையை உட்படுத்திய, முற்போக்கான மற்றும் தாக்க அடிப்படையிலான அணுகுமுறை, நாட்டின் வளர்ச்சி நீரோட்டத்தில் இந்திய சமூகத்தினரையும் உயர்த்தும் மடானி அரசாங்கத்தின் கொள்கையைப் பிரதிபலிக்கிறது.
அதேவேளையில், தொழிற்கல்வி மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் தொடர்பான திட்டங்கள் சம்பந்தப்பட்ட அங்கீகரிக்க முடியாத பல விண்ணப்பங்களும் உள்ளன.
சம்பந்தப்பட்ட அந்த விண்ணப்பங்கள் அனைத்தும், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு தேசிய டிவெட் மன்றத்தின் அதிகார வரம்பு மற்றும் பராமரிப்பின் கீழ் நிலைநிறுத்தப்படும்.
அதைத் தவிர்த்து, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு, மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகளின் கீழ் முன்னதாகவே இணைந்திருப்பதால் பரிந்திரைக்கப்பட்ட பல திட்டங்கள் அங்கீகரிக்க முடியாமல் போனது.
எனவே, நியாயமான, சமமான மற்றும் நிலையான வளர்ச்சியின் பலன்களை இந்திய சமுதாயம் தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக, மேலும் பல வியூகங்களை மடானி அரசாங்கம் வருங்காலத்தில் மதிப்பீடு செய்யும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)