உலகம்

இந்திய கடற்படையின் இயந்திர விசைப்படகுடன் பயணிகள் கப்பல் மோதல்

19/12/2024 05:20 PM

மும்பை, 19 டிசம்பர் (பெர்னாமா) --   நேற்று மாலை மணி 3.55 அளவில் இந்தியா மும்பையில் பயணிகள் கப்பல் ஒன்று, இந்திய கடற்படையின் இயந்திர விசைப்படகுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை துறைமுகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த அப்படகு, இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் அவ்விபத்து நிகழ்ந்ததாக இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீல்கமல் என்ற அந்த பயணிகள் கப்பல், இந்தியாவின் நுழைவாயில் Gateway of India-வில் இருந்து எலிபென்தாவை  நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, அவ்விபத்து நிகழ்ந்தது.

இவ்விபத்தில் பலியானவர்களில் 3 கடற்படை வீரர்களும் 10 பொதுமக்களும் அடங்குவர்.

ஏழு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் அவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

பயணிகள் கப்பலில் மொத்தம் 110 பயணிகள் இருந்ததாகவும், 101 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த இருவர், கடற்படை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)