கோலாலம்பூர், 31 டிசம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்கள் தொடரப்பட்ட வேளையில், புதிதாக சில திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
அத்திட்டங்கள் மூலம், இந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு நிதியுதவிகளும் ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டன.
அதைத் தவிர்த்து, இவ்வாண்டில் பதிவுசெய்யப்பட்ட பல சாதனைகள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்த வேளையில் சில இழப்புகளும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப, வர்த்தக துறையில் இந்திய சமுதாயத்தின் ஈடுபாடு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 13 கோடியே 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை உள்ளடக்கி, 'SPUMI GOES BIG' எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டம், ஏ.ஐ.எம் எனப்படும் அமானா இக்தியார் மலேசியா நிறுவனத்தின் வழி மேற்கொள்ளப்படும் பெண் திட்டம், BRIEF-i எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டம் மற்றும் SME Corp எனப்படும் SME கார்பரேஷன் மலேசியா, I-BAP எனும் இந்திய சிறு வணிகர்கள் மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் இதுவரை சுமார் பத்தாயிரம் இந்திய தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.
அவற்றில், SPUMI திட்டத்தின் கீழ் 3 கோடி ரிங்கிட் நிதியும், பெண் திட்டத்தின் கீழ் ஐந்து கோடி ரிங்கிட் நிதியும், BRIEF-i திட்டத்தின் கீழ் ஐந்து கோடி ரிங்கிட் நிதியும் மற்றும் I-BAP திட்டத்தின் கீழ் 60 லட்சம் ரிங்கிட் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதைத் தவிர்த்து, வணக்கம் மடானி திட்டம், PKKI 2024 எனப்படும் 2024-ஆம் ஆண்டு இந்திய கூட்டுறவுக் கழக மாநாடு மற்றும் இந்திய தொழில்முனைவோருக்கு பயிற்சி வழங்குவதற்கு அனைத்து கூட்டுறவுக் கழங்களுக்கும் தலா 30 ஆயிரம் ரிங்கிட் வரை மானியத் தொகையை அறிவிக்கப்பட்டது.
PPSMI எனும் மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2024ஆம் ஆண்டில் 11 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா 9 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 75 ரிங்கிட் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தது.
அவற்றில், சிறுநீரக சுத்திகரிப்பு உதவித் தொகை திட்டத்திற்கு 75 லட்சம் ரிங்கிட்டும், தனியார் பாலர் பள்ளி உதவித் தொகை திட்டத்திற்கு ஒரு கோடியே 8 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
அதைத் தவிர்த்து, உயர்க்கல்வி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி, பி40 பிரிவைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பேருந்து கட்டணம், தமிழ்ப்பள்ளி மேம்பாடு, இந்தியர்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி, டிவெட் ஆகியவையும் மித்ராவின் திட்டங்களில் அடங்கும்.
சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மருத்துவராகும் கனவை நிறைவேற்றும் வகையில், இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவும் பெர்டானா பல்கலைக்கழகமும் இணைந்து, 'மருத்துவர் என் கனவு' என்ற புதிய திட்டத்தினை தொடங்கின.
2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் எஸ்.டி.பி.எம் மற்றும் மெட்ரிகுலேஷன் முடித்த மாணவர்கள் சி.ஜி.பி.ஏ எனப்படும் மொத்த சராசரி புள்ளி மதிப்பீட்டில் 3.5-க்கும் மேல் பெற்றிருந்தால், இத்திட்டத்திற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டை தவிர்த்து, நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 90 வழிபாட்டுத் தலங்களுக்கு, பிரதமர் துறையின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டது.
31 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டை உள்ளடக்கிய இந்நிதி, 88 இந்து ஆலயங்களுக்கும் 2 தேவாலயங்களுக்கும் வழங்கப்பட்டது.
இவ்வாண்டில் இந்தியர்களின் குறிப்பாக சிறுவர்களின் சாதனைகள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளன.
அவற்றில், பாலர் பள்ளியைச் சேர்ந்த திவிஷா நாயுடு விக்னேஷ்வரன் 38.11 வினாடிகளில் அனைத்து ஆசிய நாடுகளின் பெயர்களையும் மிக வேகமாக அடையாளம் கண்டு அமேசிங் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
அதைத் தவிர்த்து அவர், பிரிட்டிஷ் அனைத்துலகச் சாதனை புத்தகத்தின் சாதனையாளர் விருது, ஆசியான் அளவிலான சாதனையாளர் விருது, சாம்பியன் வோர்ல்ட் சாதனை புத்தகத்தின் சாதனையாளர் விருது, உலகச் சாதனைப் புத்தகத்திற்காக 100 உலகத் தலைவர்களின் பெயரை 3 நிமிடங்கள் 46 வினாடிகளில் கூறி உலகச் சாதனையாளர் விருது ஆகியவற்றையும் வென்றுள்ளார்.
கண்ணைக் கட்டிக் கொண்டு கற்பனைக்கு எட்டாத பல சாகசங்களைப் புரிந்ததன் வாயிலாக, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர், மஞ்சோங் வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 14 மாணவர்கள்.
10 முதல் 17 வயதுடைய மாணவர்கள் மண்டபத்திற்கு வெளியே உள்ள திடலில் கண்ணைக் கட்டியவாறு கோல் அடித்தது, காய்கறிகளை அடையாளம் கண்டு பெயரைக் கூறுதல், வலைப்பந்தில் கோல்போடுதல், 400 மீட்டர் ஓடுதல், மற்றவர்களை அடையாளம் காணுதல், மிதிவண்டி ஓட்டுவது, கேரம் எனப்படும் சுண்டாட்டம் விளையாடுதல், தேகுவான்டோ சாகசம், நாட்டின் வரைபடத்தை அடையாளம் காட்டுதல், நெகிழிக் குவளையை அடுக்குதல் போன்ற சாகசங்களைப் புரிந்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.
பேராக் மாநிலத்தில் 86 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 800 மாணவர்கள் முதல் முறையாக திருகுறளை வாசித்து அதன் பொருளை 30 வினாடிக்குள் ஒப்பிக்கும் போட்டி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
மலேசியாவின் சிறந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களில் ஒருவரான சிவசங்கரி சுப்ரமணியம், உலக விளையாட்டு அமைப்பால் ஏப்ரல் மாதத்திற்கான ஸ்குவாஷ் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
மலேசியாவின் ஆங்கில செய்தி வாசிப்பாளரான முனைவர் மோகனப்ரியா சினா ராஜா, “Monkey Man” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 'We Voice Spark Global Round 2024' என்ற பேச்சுப் போட்டியில் டமான்சாரா உத்தாமா தேசியப் பள்ளி மாணவி தனுஷ்யா மணிமுத்து வெற்றி பெற்று உலக அரங்கில் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்தார்.
மலேசியாவின் நீதித்துறையில் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு போராடும் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன் 'Forbes’ 50 Over 50: Asia 2024' பட்டியலில் இடம்பெற்றார்.
எட்டு வயதிலேயே தமது சொந்த எழுத்திலான 'Unicorn and Little Amanda' என்ற நூலை வெளியிட்டு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் ஆயுஷி யோகேஸ்வரன்.
ஐக்கிய அரபு சிற்றரசின், அபு டாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 20-வது உலக சீலாட் வெற்றியாளர் போட்டியில், நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்தார் தாமராஜ் வாசுதேவன்.
இதனிடையே, இவ்வாண்டில் நாட்டில் முக்கிய பிரபலங்களின் மறைவும் இந்திய மக்களால் பரவலாகப் பேசப்பட்டது.
மலேசிய வர்த்த உலகில் கொடிகட்டி பறந்தவரும், நாட்டின் இந்தியர்களின் அடையாளத்தை உலக அளவில் கொண்டு சேர்த்தவருமான பிரபல தொழிலதிபர் டான் ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் கடந்த நவம்பர் 28ஆம் தேதி காலமானார்.
நாட்டின் பொது சேவைத் துறையில் பணியாற்றிய முதல் பெண்மணியான 100 வயதுடைய டான் ஶ்ரீ தேவகி கிருஷ்ணன் கடந்த ஜனவரி 20ஆம் தேதி காலமானார்.
ஆகஸ்ட் 23ஆம் தேதி, கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா, மலாயான் மென்ஷன் முன்புறத்தில் ஏற்பட்ட புதைகுழியில், 48 வயது இந்தியப் பிரஜையான பெண் ஒருவர் விழுந்து சிக்கிக் கொண்ட சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரைத் தேடி மீட்கும் பணிகளில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து தேடல் நடவடிக்கைகள் ஒன்பது நாள்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)