கோலாலம்பூர், 26 டிசம்பர் (பெர்னாமா) -- சங்க காலத்தில் பாதுகாப்பையும் தற்காப்பையும் முன்னிறுத்தி கற்றுக்கொடுக்கப்பட்ட பாரம்பரிய முறையிலான தற்காப்பு கலைகள், 19-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பலராலும் விரும்பி ஏற்கப்பட்டு நவீன விளையாட்டாக வடிவம் பெற்றன.
கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, களறி பயிற்று, தேக்குவாண்டோ, வர்மக்கலை உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பல்வேறு வடிவங்களில் வளர்ந்து, உலக விளையாட்டு போட்டிகளில் கவனம் பெறுவதால், பாலினங்களைக் கடந்து அதிகமானோர் அதனை கற்றுத் தேர்கின்றனர்.
அதில், ஆண்களைக் காட்டிலும் நாட்டில் பெண்களின் ஈடுபாடு குறைந்து காணப்படும் குத்துச்சண்டையில், தம்மை இணைத்து பல சாதனைகளோடு சமுதாயத்தில் வலம் வரும் குத்துச்சண்டை வீராங்னை நவநிஷா பரமேஸ்பிரான் உடனான சிறப்பு நேர்காணல் தொடர்ந்து இடம்பெறுகிறது.
இயந்திரங்களாக மனிதர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகில் ஒவ்வொருவரும் தமது உடலையும் உள்ளத்தையும் வளப்படுத்திக் கொள்வதற்கு இந்த தற்காப்பு கலையைக் கற்றுக்கொள்கின்றனர்.
அதே காரணத்தோடு, தமது 11-வது வயதிலே குத்துச்சண்டையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய நவநிஷா பரமேஸ்பிரான், பின்னர் அக்கலையின் மீது தீராத ஆவல் கொண்டு படிப்படியாக அதில் முன்னேறியதாக தெரிவித்தார்.
''முதலில் நான் சின்ன சின்ன போட்டிகளில் தான் கலந்து கொண்டேன். நட்பு முறையிலான போட்டிகள், மாநில ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டேன். ஒரு கட்டத்தில் என்னுடைய திறன்கள் அனைத்தும் வளர்த்துக் கொண்டவுடன் Golden Glove மற்றும் Piala Malaysia போன்ற மலேசியா ரீதியிலான போட்டிகளில் நான் பங்கெடுத்துக் கொண்டேன். அதையே என்னுடைய பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். ஏனென்றால், அதில் தான் நான் தங்கம் வென்றேன். நிறைய பாராட்டுகள், சமூக வலைத்தளங்களில் நிறைய வாய்ப்புகளும் கிடைத்தது'',என்று அவர் கூறினார்.
பெரும்பாலும் குத்துச்சண்டையை ஆண்கள் விரும்பி தேர்வு செய்யும் நிலையில் ஒரு பெண்ணாக தாம் அதனை விரும்பி ஏற்றபோது, சிலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக நவநிஷா கூறினார்.
இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவே தாம் எதிர்கொண்ட சவால்களை உடைத்தெறிவதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
குத்துச்சண்டையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வந்த, கடந்த 14 ஆண்டுகளில் தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் அவர் இவ்வாறு விளக்கினார்.
''என்னுடைய இடத்தில் அனைவரும் ஆண்கள் தான் இருக்கின்றனர். ஆக, என்னுடைய உடல் வலிமையையும் ஆண்களின் உடல் வலிமையையும் இணைக்க மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் நல்ல பலமாக இருப்பார்கள், எனக்கு சிறிது நேரத்திலே பலம் இழந்து விடும். ஆக, அதற்கான பயிற்சியை மேற்கொண்டு என்னுடைய உடல் வலிமையை மீண்டும் உயர்த்த சில காலங்கள் எடுத்துக் கொண்டது'', என்றார் அவர்.
இக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தமது ஆர்வம் ஒருபோதும் கல்விக்குத் தடையாகி விடக்கூடாது என்பதை உணர்ந்த நவநிஷா, சிறந்த நேர நிர்வகிப்பு முறையைப் பின்பற்றி, மருத்துவ உளவியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்திருக்கின்றார்.
தமது இலக்கில் வெற்றிக்கண்ட அவர், குத்துச்சண்டையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்போருக்கு, குறிப்பாக பெண்களுக்கு சில ஆலோசனைகளையும் முன் வைத்தார்.
''குத்துச்சண்டை மட்டுமல்ல அதில் கிடைத்த பாடத்தை நான் என்னுடைய வாழ்க்கையிலு பயன்படுத்துகிறேன். ஆக, நான் நினைத்த ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் அடுத்தக்கட்டம் என்ன செய்வது, இது சுயமரியாதையை மேம்படுத்தியுள்ளது. அதேபோல, அனைத்து பெண்களும் இதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், எதை கற்றுக் கொண்டாலும் அதில் உங்கள் வாழ்க்கை திறனை எவ்வாறு புகட்டுவது என்பதை சிந்தித்தாலே நீங்கள் இன்னும் வலிமையுடன் இருப்பீர்கள்'', என்று நவநிஷா கூறினார்.
தடுத்தல், சண்டையிடுதல், யோகா எனப் பல நுட்பங்கள் கொண்ட இதுபோன்ற தற்காப்புக்கலைகள், வலிமை, சகிப்புத்தன்மை, வேகம், சுயகட்டுப்பாடு, ஆன்மீகம் போன்றவறை சேர்த்தே போதிப்பதாக நவநிஷா குறிப்பிட்டார்.
இன்று அனுசரிக்கப்படும் உலக குத்துச்சண்டை தினத்தை முன்னிட்டு பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)