உலகம்

கசக்ஸ்தானில் நிகழ்ந்த விமான விபத்தில் மலேசியர்கள் பாதிக்கப்படவில்லை

26/12/2024 05:25 PM

அக்தௌ, 26 டிசம்பர் (பெர்னாமா) --   கசக்ஸ்தான், அக்தௌ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முற்பட்ட அசர்பைஜான் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

நேற்று நிகழ்ந்த இக்கோர விபத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி இரங்கல் தெரிவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான அண்மைய நிலவரங்களைத் தமது தரப்பு கண்காணிக்கும் என்று விஸ்மா புத்ரா தெரிவித்திருக்கிறது.

உதவி தேவைப்படும் அல்லது கூடுதல் தகவல்களைப் பெற விரும்பும், கசக்ஸ்தானில் உள்ள மலேசியர்கள் அஸ்தானாவில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விமானப் பணியாளர்கள் உட்பட 67 பேருடன் பயணித்த அவ்விமானம், அக்தௌ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் 38 பேர் உயிரிழந்ததுடன், 28 பேர் உயிரித்தப்பினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)