பொது

16 லட்சம் ரிங்கிட் சிகரெட் & மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

26/12/2024 05:42 PM

தெமெர்லோ, 26 டிசம்பர் (பெர்னாமா) - ஜோகூரிலும் சிலாங்கூரிலும் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனைகளில் சிகரெட் மற்றும் மதுபானம் கடத்தல் நடவடிக்கையை அரச மலேசிய சுங்கத் துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

இதன் மூலம் 16 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட் மற்றும் மதுபானங்களை சுங்கத் துறை பறிமுதல் செய்ததாக பகாங் மாநில சுங்கத் துறை இயக்குநர் முஹமாட் அஸ்ரி செமான் தெரிவித்தார்.

டிசம்பர் மூன்றாம் தேதி, ஜோகூர் உலு திராமில் உள்ள வீடொன்றில் முதல் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முஹமாட் அஸ்ரி செமான் கூறினார்.

"சோதனை வழி, 49,340 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு முத்திரையிலான 449,400 சிகரெட்களை குழு கண்டறிந்தது. அதன் வரி மதிப்பு 301,538 ரிங்கிட், '' என்றார் அவர்.

இன்று, மெந்தாகாப்பில் உள்ள தெமெர்லோ மாவட்ட சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முஹமாட் அஸ்ரி அவ்வாறு கூறினார்.

டிசம்பர் 10-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் சோதனையில், ஜோகூர் தெம்ராச் குடியிருப்பு பகுதி ஒன்றில், 55,856 ரிங்கிட் மதிப்புள்ள சிக்ரெட்களை கொண்டு வந்த வெல்ஃபயர் ரக காரைத் தமது தரப்பு பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.

அதிகாரிகளை குழப்பும் நோக்கில், கடத்தல் சிகரெட்டுகளை ஜோகூர் முழுவதும் கொண்டு செல்ல சொகுசு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

இதனிடையே, சிலாங்கூர் வட கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது சோதனை நடவடிக்கையில் மதுபானங்கள் கொண்ட 12 மீட்டர் கொள்கலன் ஒன்றை சுங்கத்துறை பறிமுதல் செய்யது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு 60,693.60 ரிங்கிட்டாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)