அக்தௌ, 27 டிசம்பர் (பெர்னாமா) - அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்ய வான் தற்காப்பு அமைப்பே காரணம் என்று விமானப் போக்குவரத்து நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், இக்குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்திருக்கிறது.
புதன்கிழமை அசர்பைஜான் தலைநகரான பாக்குவிலிருந்து ரஷ்ய நகரமான க்ரோஸ்னிக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது திசைதிருப்பப்பட்டு கசக்கஸ்தான், அக்தௌ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானது.
ரஷ்யாவுக்கு பயணித்த அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ரஷ்ய எல்லையை நோக்கிய பயணித்த அந்த விமானத்தின் மீது ரஷ்ய வான் தற்காப்பு அமைப்பு தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆயினும், பறவையை மோதி அவசரநிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அவ்விமானம் அக்தௌ விமான நிலையத்தில் திரும்பியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக ரஷ்யாவின் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தற்போது அப்பெட்டி விசாரணைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கசக்கஸ்தானின் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானப் பணியாளர்கள் உட்பட 67 பேருடன் பயணித்த அவ்விமானம், அக்தௌ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 38 பேர் உயிரிழந்ததுடன் 29 பேர் உயிர் தப்பினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)