கோலாலம்பூர், 27 டிசம்பர் (பெர்னாமா) -- நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்பிற்கு பின்னர் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவுகளே படக்குழுவினரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.
அதில், அண்மையில் இயக்குநர் கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் வெளிவந்த C4CINTA எனும் உள்ளூர் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைப் படைத்துள்ளது.
சுமார் 14 ஆண்டுகளாக பல குறும்படங்களை இயக்கி வெளியிடுவதில் அனுபவம் கொண்ட கார்த்திக் ஷாமளனின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் C4CINTA, காதல், நகைச்சுவை, நட்பு என அனைத்தும் அடங்கிய குடும்ப சித்திரமாக மக்களைக் கவர்ந்துள்ளது.
இன்று மக்கள் மத்தியில், மலேசிய திரைப்படங்கள் மீதான பார்வை முற்றிலும் மாறுப்பட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் மூலம் அவர்கள் கொடுத்து வரும் வரவேற்பும் விமர்சனமும் தம்மை ரசித்து மெய் சிலிர்க்க வைப்பதாக C4CINTA திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஷாமளன் கூறுகின்றார்.
''மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த படத்தில் நடித்தவர்களுக்கு மிகவும் சந்தோஷம். அதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்குக் கொடுத்தால் அதை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் நான் மக்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் கொடுத்த அந்த ஆதரவுகள் இன்னும் நிறைய திரைப்படங்களை இயக்குவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது'', என்று அவர் கூறினார்.
மேலும், தமது முந்தைய படங்களில் இணைந்து பணியாற்றிய கலைஞர்களோடு, புதுமுகங்கள் சிலரையும் இப்படத்தில் தாம் அறிமுகம் செய்திருப்பதால், கதாப்பாத்திர தேர்வுகளில் தாம் எந்தவொரு சிக்கலையும் எதிர்நோக்கவில்லை என்று அவர் கூறினார்.
எனினும், திரைப்படத்தின் சில காட்சிகளை இயற்றுவதற்கு தாம் எதிர்நோக்கிய சவால்கள் குறித்து கார்த்திக் ஷாமளன் பகிர்ந்து கொண்டார்.
''சிங்கப்பூரில் எடுத்த காட்சிகள் எங்களுக்கு சவாலாக இருந்தது. காரணம் அதனுடைய மதிப்பு வேறுபாடாக இருந்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் நாங்கள் ஒரு காட்சியை எடுக்க வேண்டும், ஒரு பாடலை எடுக்க வேண்டும். மேலும், படத்திலுள்ள 50 அல்லது 60 விழுக்காட்டு காட்சிகள் சிங்கப்பூரில் தான் இருக்கும். ஆக, அது எனக்கு சரியாக திட்டமிட்டு எடுக்க வேண்டும் என்று இருந்தது. மிகப் பெரிய ஒரு விஷயம் என்று சொன்னால் திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சி, கடல் பகுதியில் எடுத்த காட்சிகள் சூரியன் மறையும்போது எடுக்க வேண்டும் என்று இருந்தமையால், எங்களால் ஒரு நாளில் எடுக்க முடியவில்லை. மாறாக, ஒவ்வொரு காட்சிகளும் 4 நாள்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது'', என்றார் அவர்.
இதனிடையே, சிறந்த படைப்பு, உற்சாகமூட்டும் தயாரிப்பு குழு மற்றும் முறையான திரைப்பட விளம்பரங்கள் இருந்தால், ஒரு படம் நிச்சயம் வெற்றிப்படமாக மாறும் என்பதை தமக்கு உணர்த்திய கலைஞர்கள் குறித்தும் கார்த்திக் ஷாமளன் பேசினார்.
''அனைவரின் மனதிலும் ஒன்று மட்டும்தான் இருந்தது, இந்த படத்தை ஒரு மிகப் பெரிய வெற்றிப்படமாக மாற்ற வேண்டும். ஆக, ஒரு குழு ஒன்றாக இணைந்து வேலை செய்தால், ஒன்றாக இணைந்து விளம்பரம் செய்தால் நிச்சயம் ஒரு நல்ல படத்தை வெற்றிப் பெற வைக்க முடியும் என்பதை என்னுடைய குழு எனக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றனர். நான் நம்புகிறேன் இது கண்டிப்பாக இத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையாக இருக்கும். நானும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன், மற்றவர்களும் கற்றுக் கொண்டுதான் இருப்பார்கள்'', என்று அவர் தெரிவித்தார்.
இன்று, கலை சங்கமத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது கார்த்திக் ஷாமளன் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)